ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகள் வெளியீடு!

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்த நிலையில், மத்திய அரசு இதற்கான வரைவு விதிமுறைகளை இப்போது வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் கேமிங் என்பது உலகெங்கும் தொடர்ந்து பிரபலமடைந்து வருகிறது. அதிலும் கொரோனா பெருந்தொற்று அனைவரையும் வீடுகளிலேயே முடக்கிய நிலையில், ஆன்லைன் கேமிங் அப்போது உச்சம் தொட்டது. ஆன்லைன் வழியாகப் பலரும் தங்கள் பிடித்தவர்களுடன் கேமிங் தளங்களில் விளையாடி மகிழ்ந்தனர். இணைய வேகமும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் கேமிங் பலருக்கும் பிடித்த பொழுதுபோக்காக மாறியது. இருப்பினும், சிலர் இந்த ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையாக மாறிவிடுவதாகவும் இதனால் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்பட்டது. குறிப்பாகப் பன்னாட்டில் தலைமையிடங்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் எந்தவொரு விதிமுறைகள் பின்பற்றுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மத்திய அரசு இதில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.

இந்தச் சூழலில் மத்திய அரசு ஆன்லைன் கேமிங் தொடர்பாக வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட வரைவு ஆன்லைன் கேமிங் விதிகளில், சுய-ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் வீரர்களைக் கட்டாய சரிபார்க்க வேண்டும் என்றும் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்குக் கட்டாயம் இந்திய முகவரி இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2021இல் சமூக வலைத்தளங்களுக்கு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் வெளியிடப்பட்ட நிலையில், அந்த விதிமுறைகள் ஆன்லைன் கேமிங் நிறுவனங்களும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் கேமிங் தளங்கள் இந்தியாவின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். சூதாட்டம், பந்தயம் அல்லது குறைந்தபட்ச வயது ஆகிய விஷயங்களில் இந்தியாவின் சட்டங்களை இந்த கேமிங் நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த நோட்டீஸில், “இந்த வரைவு திருத்தங்கள், ஆன்லைன் கேமிங் துறையின் வளர்ச்சி உறுதி செய்யும். அதேநேரம் இந்த துறைக்குத் தேவையான சீர்திருத்தங்கள் அல்லது கட்டுப்பாடுகளை அளிக்கும். இந்தியச் சட்டத்திற்கு இணங்காத ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் இங்குச் செயல்பட அனுமதி இல்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சுய-ஒழுங்குமுறை அமைப்பால் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆன்லைன் கேம்களிலும் ரிஜிஸ்டிரேஷன் மார்கை காட்சிப்படுத்த வேண்டும். மேலும், பணம் டெபாசிட் செய்வது.. அதை திரும்ப எடுப்பது ஆகியவற்றில் இருக்கும் விதிமுறைகளைத் தெளிவாகப் பயனாளர்களுக்குத் தெரியும்படி இருக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், பரிசுத் தொகை எப்படி வழங்கப்படும், கூடுதல் கட்டணங்கள் என்ன, யூசர்கள் சரிபார்ப்பு என்று அனைத்து விதமான தகவல்களும் அதில் விளக்கமாகக் கூறப்பட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் ஐடி அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்யப்படும். .இந்த சுய-ஒழுங்குமுறை அமைப்புகள் தான் பயனாளர்களிடம் இருந்து பெறும் புகார்களை நிவர்த்தி செய்யும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விரிவான வரைவு விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில், வரும் ஜன.17ஆம் தேதி வரை பொதுமக்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் கேமிங் தளங்களுக்குத் தகுந்த கட்டுப்பாடுகள் தேவை என்று பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில் மத்திய அரசு இந்த புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எந்தவொரு கட்டுப்பாடுகளையும் பின்பற்றாமல் செயல்பட்டு வருவதாகப் புகார் எழுந்த நிலையில், மத்திய அரசு இந்த கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. வரும் பிப். மாதம் இதற்கான விதிமுறைகள் முழுமையாக வெளியிடப்படும் என்று ஐடி துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.