ஊடகவியலாளர் பிஸ்மியை ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்ட சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று கூறியதற்காக ஊடகவியலாளர் பிஸ்மியின் வீட்டுக்கு சென்று ரஜினி ரசிகர்கள் முற்றுகையிட்டனர். இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களில் ரஜினி ரசிகர்கள் பிஸ்மிக்கு எதிராகவும், ரஜினியை போற்றியும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று சொன்னதற்காக ஊடகவியலாளர் பிஸ்மியை மிரட்டிய ரஜினி ரசிகர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்த்திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல; ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த தலைமுறைக்கேற்ப மாறக்கூடியது. திரைப்படங்களுக்கு இருக்கின்ற வரவேற்பு, மக்கள் அளிக்கும் பெருவாரியான ஆதரவு ஆகியவற்றைப் பொறுத்து அந்த இடம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. தமிழ்த்திரைப்படங்கள் வெளியான தொடக்கக் காலத்தில் தியாகராஜ பாகவதர் தமிழத்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அதன்பிறகு, எம்.ஜி.ஆர் உச்ச நட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே ரஜினிகாந்த் திரைத்திரையில் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார். அதன்பின், தற்போதைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக தம்பி விஜய் உச்சத்தில் இருக்கிறார்.
இந்த எதார்த்தச் சூழலை விளக்கி, அதுகுறித்த தனது கருத்துகளை ஊடகத்தில் தெரிவித்ததற்காக திரை விமர்சகரும், பத்திரிகையாளருமான சகோதரர் பிஸ்மி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்த முனைந்த ரஜினிகாந்த் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று. ரஜினிகாந்த் ரசிகர்கள் என்றால் அனுபவமும், முதிர்ச்சியும், பக்குவமும், தெளிவும் பெற்றவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால் அப்படியானவர்களில் சிலரே, மாற்றுக்கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிகையாளர் ஒருவரது இருப்பிடத்திற்கே சென்று, ஒருமையில் பேசி மிரட்டுவது வருந்தத்தக்கதாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கின்றது. இதுபோன்ற செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ரஜினிகாந்த்தே இதனை விரும்பமாட்டார்கள். இத்தகைய செயல்களானது ரஜினிகாந்த் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். ஆகவே அவரது ரசிகர்கள் இனியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.