அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: காயத்ரி ரகுராம்

பா.ஜ.க.வில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அண்ணாமலை மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழக பா.ஜ.க.வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக கூறி, 6 மாத காலத்துக்கு நீக்கம் செய்வதாக கடந்த நவம்பர் மாதம் 22-ந் தேதி தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு அப்போது பதில் அளித்த காயத்ரி ரகுராம், “கட்சியில் இருந்து நீக்கியதை ஏற்றுக்கொள்கிறேன். இடைநீக்கத்துடன் தேசத்துக்காக உழைப்பேன்” என்று கூறியிருந்தார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக தமிழக பா.ஜ.க.வின் தலைமை மீது காயத்ரி ரகுராம் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பு அளிக்காததற்காக தமிழக பா.ஜ.க.வில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நான் கட்சியில் இருந்தும், வெளிநபர் போன்று சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்படுவதை நன்றாக உணர்கிறேன். பிறரை புண்படுத்துவது இந்து தர்மம் அல்ல. சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதால் அண்ணாமலையின் தலைமையில் தொடரமுடியாது.

பிரதமர் மோடி ஸ்பெஷல் மனிதர். அவர் இந்த தேசத்தின் தந்தை. அவர் எப்போதும் என்னுடைய விஸ்வகுருவாக இருப்பார். தலை சிறந்த தலைவராக இருப்பார். அமித் ஷா எப்போதும் என்னுடைய சாணக்கிய குருவாக இருப்பார். நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர். கடந்த 8 வருடங்களாக என்னுடன் வேலை பார்த்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி. அவர்கள் என்னுடன் அன்பாக இருந்தனர். எனக்கு மரியாதை கொடுத்தனர். அது ஒரு சிறந்த பயணம்.

பெண்கள் பாதுகாப்பாக இருங்கள். உங்களை யாராவது காப்பாற்றுவார்கள் என்று நம்பாதீர்கள். காப்பாற்ற யாரும் வரப்போவதில்லை. நீங்கள் சுயமாக இருக்கிறீர்கள். உங்களை நம்புங்கள். மதிக்காத இடத்தில் ஒருபோதும் இருக்காதீர்கள். வீடியோ-ஆடியோ ஆதாரம் என்னிடம் இருக்கும் அனைத்து வீடியோக்களையும், ஆடியோக்களையும் போலீசாரிடம் புகாராக கொடுக்க தயாராக இருக்கிறேன். அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும். அண்ணாமலை மலிவான அரசியலுக்காக தந்திரமாக பொய் பேசுபவர். அதர்மத்தின் தலைவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.