நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்த, ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது, போதையில் இருந்த மற்றொரு பயணி சிறுநீர் கழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்த, ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது, போதையில் இருந்த மற்றொரு பயணி சிறுநீர் கழித்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி விமானத்தின் பிசினஸ் கிளாஸ் வகுப்பில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக ஏர் இந்தியா குழுமத் தலைவர் என் சந்திரசேகரனுக்கு, பாதிக்கப்பட்ட பெண் கடிதம் எழுதியுள்ளார். அதில், “நான் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தேன். ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் தூங்க ஏதுவாக விளக்கு அணைக்கப்பட்ட வேளையில் ஒரு போதை ஆசாமி என் இருக்கைக்கு அருகே வந்தார். நான் சுதாரிப்பதற்குள் அவர் அங்கே சிறுநீர் கழித்தார். அதன்பின்னரும் கூட அவர் ஆடையை சரி செய்யாமல் ஆபாசமாக நின்றார். என் உதவிக் குரல் கேட்டு சக பயணிகள் அந்த நபரை அப்புறப்படுத்தினர். விமான சிப்பந்திகள் எனக்கு வேறு ஆடை அளித்தனர். அந்த இருக்கையின் மீது வேறு சீட் விரித்தனர். நான் எனக்கு ஏற்பட்ட துயரம் பற்றி புகார் அளித்தேன். ஆனால் விமானம் தரையிறங்கிய பின்னர் அந்த நபர் எதுவுமே நடக்காததுபோல் இறங்கிச் சென்றார். இந்த விஷயத்தில் விமான சிப்பந்திகள் மெத்தனமாக இருந்துவிட்டனர்” என்று கூறியிருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் ஒரு மாதத்திற்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா இன்று தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா சார்பில் அந்த நபர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்கும்படி விமான நிறுவனத்திடம் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கோரியுள்ளது. இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறி உள்ளது.