காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தேசிய தலைவராக பதவியேற்றதில் இருந்து முழு நேர கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது, ராகுல் காந்தி சென்று வரும் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்பது என அவர் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை சோனியா காந்திக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மூச்சுவிடுவதில் சோனியா காந்திக்கு சிரமம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவர், டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சோனியா காந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அவரது உடல் நிலையில் பிரச்சனை இல்லை என்றும், வழக்கமாக பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் எம்பியும் சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக டெல்லியில் தங்கி ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று அவர் டெல்லியில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு சென்றார். டெல்லியில் தங்கி இருக்கும் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியும் மருத்துவமனையில் அவருடன் உள்ளார்.

நேற்றே சோனியா காந்திக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே நேற்று டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் நோக்கி இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தி 7 கிலோ மீட்டர் தூரம் சென்றுவிட்டு திரும்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் நேற்று ஒற்றுமை யாத்திரை நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து இன்று காலை 6 மணியளவில்தான் உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத் அருகே உள்ள மாவிகலாம் பகுதியில் ஒற்றுமை யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டது. இன்று மதியத்திற்கு பிறகு உத்தரப்பிரதேசத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் பிரியங்கா காந்தியும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனைக்கு சோனியா காந்தியுடன் சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.