“தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி அளித்துள்ளதாக” பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை, தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சந்தித்து, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைப்பணிகளை விரைந்து முடித்திடவும், ஒப்பந்தம் முடிந்த சுங்கச்சாவடிகளை அகற்றிடக் கோரியும் கோரிக்கை கடிதம் வழங்கினார்.
இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் பல்வேறு நிலைகளில் காலதாமதமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது என்பதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆய்வுக்கூட்டத்தில் எங்களிடத்தில் அறிவுறுத்தியதையடுத்து, நிலுவையில் உள்ள பணிகளை எல்லாம் விரைந்து செயல்படுத்தபட வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு சாலைகள் சம்பந்தமாக கடிதங்களை இன்றைய தினம் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து வழங்கப்பட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பணிகளான தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு உயர்மட்ட சாலை அமைப்பது மற்றும் தற்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள சாலைகள் 8 வழி சாலையாக விரிவாக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை விரிவு படுத்த வேண்டும் என்று ஏற்கனவே 2 முறை வலியுறுத்தி உள்ளோம். இப்போது 3வது முறையாக பணிகளை நீங்கள் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.
பின்னர் திருச்சிக்கு அருகாமையில் உள்ள துவாக்குடி உயர் மட்ட சாலை. அதுபோன்று ஸ்ரீபெரும்புதூர் முதல் பூந்தமல்லி வரை, மாதவரம் முதல் சென்னை வெளிவட்ட சாலை வரை உயர் மட்ட சாலைகள் அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே கடிதம் அளிக்கப்பட்டிருந்தது. அதுவும் இந்த ஆண்டே பணிகளை துவக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
மேலும் பதற்றமான இடங்களான கப்பலூர், கிருஷ்ணகிரியில் ஏற்கனவே சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது, அது நகரப்பகுதியில் அமைந்திருக்கிறது, குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் கிருஷ்ணகிரி நகர்புறத்தில் சுங்கச்சாவடி அமைந்திருப்பதால் நகரத்தில் வசிக்கும் மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கோ, அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்வதற்கோ அந்த சுங்கச்சாவடியை கடந்து செல்லவேண்டும் என்ற நிலைதான் உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் ஏற்கனவே பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். அதை நானும், என் துறை செயலாளரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். உடனடியாக அமைத்து தருகிறோம் என்று கூறினார். குறிப்பாக கிருஷ்ணகிரிக்கும், கப்பலூருக்கும் செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறோம்.
அதை தொடர்ந்து, பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தம் முடிவடைந்த இடங்களில், 40 சதவீதம் குறைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, நாடாளுமன்ற உறுப்பினர் வில்சனிடம் கூறியிருந்தார். அது சம்பந்தமாக கணக்குகள் எடுத்துள்ளோம் நேரம் முடிய வரும் சமயத்தில் அதை நாங்கள் மாற்றி அமைப்போம் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
சேலம், உளுந்தூர்பேட்டை சாலை என்பது பல இடங்களில் 4 வழி சாலையாகவும் சில இடங்களில் 2 வழி சாலையாகவும் அதில் குறிப்பாக 8 இடங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஏற்கனவே பழைய சாலைகள் குறிப்பாக கள்ளக்குறிச்சி என்பது மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது. மாவட்ட தலைநகரில் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை சென்றுகொண்டு இருந்தது இப்போது நகாய் மூலமாக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சாலைகள் அனைத்தும் பழுதடைந்து உள்ளது. சேலம் முதல் உளுந்தூர்பேட்டை சாலைகளில் 8 இடங்களில் பழுதடைந்து உள்ளது என்று கூறினோம். உடனே அதை கவனத்தில் கொண்டு சம்பந்தபட்ட அலுவலர்களை அழைத்து வேறொரு ஒப்பந்ததாரரை நியமித்து அந்த பணிகளை எல்லாம் உடனடியாக தொடங்குகிறோம் என்று தெரிவித்தார்கள்.
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து செயல்படுத்திடவேண்டும் என்ற அடிப்படையில் தான் அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தோம். தமிழ்நாடு முதலமைச்சர் கூறிய கருத்துகளை அவர்களிடம் தெரிவித்தோம். அனைத்து பணிகளும் இந்த ஆண்டே விரைந்து முடித்திட துறையின் சார்பாக முயற்சி செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.