தமிழகத்தில் திராவிட ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி. கூறினார்.
காசியில் நடந்த தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்களுக்கு சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அதில் கவர்னர் ஆர்.என்.ரவி அனைவரையும் வாழ்த்தி பேசியதாவது:-
காசி தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கலந்துகொண்ட அனைவரும், அடுத்த 25 ஆண்டுகளில் விஷ்வ குரு என்ற இலக்கை அடைவதற்காக பிரதமர் கொண்டுவந்துள்ள தொலைநோக்கு பார்வையை எடுத்துச்செல்ல வேண்டும். காசி தமிழ்ச்சங்கம நிகழ்ச்சியை ஒரு வரலாற்று நிகழ்வாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் நன்றி. அரசு எந்திரத்துடன் இணைந்து இந்த நிகழ்வை மிகச்சிறப்பாக நடத்தியிருக்கிறீர்கள். ஒரே பார்வை, ஒரே குடும்பம் சுதந்திரம் பெற்ற தொடக்கத்தில் நமது நாட்டில் பல்வேறு பிரிவினைகள் இருந்தன. அதனால் பிரச்சினைகளும் எழுந்தன. ஆனால் தற்போது பாரதம் என்ற ஒரே பார்வையில் ஒரே குடும்பமாக உணர்கின்றனர்.
தமிழகத்தில் நிலவும் சில தவறான மற்றும் எதிர்மறையான அணுகுமுறைகளை ஒழிக்க வேண்டும். சமுதாயத்தில் அனைத்து மக்களுக்கும் பலனளிக்கக் கூடிய கல்வி உள்ளிட்ட அம்சங்களை தங்களுடைய சொந்த காரணங்களுக்காக மறுக்கும் அரசியல், வருத்தத்தை அளிப்பதாக உள்ளது. இந்தியா என்பது ஒரே நாடு. ஆனால் நாம் அதை பல மாகாணங்கள் சேர்ந்த அமெரிக்கா தேசம் போல சிலர் பார்க்கிறார்கள். அது தவறு. இந்தியா முழுவதும் செல்லுபடியாகும் சில அம்சங்களை தமிழகம் மட்டும் ஏற்க மறுக்கிறது. இது தொடர்பாக தவறான கருத்துகள் எழுதப்பட்டு உள்ளன. இதில் உண்மை வெளிவர வேண்டும். பாரத தேசத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்றே. தமிழகத்தில் திராவிட ஆட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.