காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்க அண்ணாமலை: கனிமொழி

ஆளுங்கட்சியை பற்றி பேசும் தம்பி அண்ணாமலையை பற்றி பாஜகவில் இருந்த அம்மையார் ஒருவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவையொட்டி விருகம்பாக்கத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக துனைப்பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியான் மற்றும் பிரபாகர் ராஜா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு திமுக இளைஞரணின் நிர்வாகிகள் ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகிய இருவரும் பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட காவலர் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். தொடர்ந்து திமுக எம்எல்ஏ பிரபாகர் ராஜா கேட்டுக்கொண்டதால், நிர்வாகிகள் கைது செய்யப்படவில்லை. இதனிடையே அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், திமுக நிர்வாகிகள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

பெண் காவலரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட திமுக நிர்வாகிகள் தாமதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். இந்த நிலையில் சென்னை விமான நிலையம் வந்த திமுக துணை பொது செயலாளர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

திமுக பொதுக்கூட்டத்தில் பெண் காவலர் மீது சீண்டல்கள் நடந்ததாக கூறப்படும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பது உறுதி. நடந்ததாக கூறப்படும் சம்பவம் நிச்சயமாக வெட்கப்படக்கூடியது, கண்டிக்கத்தக்கது. அதனால்தான் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஆளுங்கட்சி உள்பட பிற கட்சிகளை பற்றி தம்பி அண்ணாமலை குறை கூறிக்கொண்டிருக்கிறார். ஆனால் அண்ணாமலை பற்றி பாஜகவில் இருந்த ஒரு அம்மையார் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதற்கு அண்ணாமலை என்ன பதில் கூறப்போகிறார். அண்ணாமலை மீது கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதற்கு, அவர்கள் முதலில் பதில் கூற வேண்டும் என்று தெரிவித்தார்.