அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியான விஎம் சுதாகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இந்திய சினிமாவின் அடையாளமாகவும் உள்ளார். 70 வயதை கடந்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இப்போதும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கோடிகளில் பிஸ்னஸ் கொடுத்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் ஒரு மரணத்தால் நிலைகுலைந்து போயுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதாவது அகில இந்திய ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் விஎம் சுதாகர். நீண்ட காலமாக சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த விஎம் சுதாகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அவரது நிலைமை மோசமடைந்ததை அடுத்து வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் வி.எம். சுதாகர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ரசிகர்களும் விஎம் சுதாகரின் மறைவுக்கு அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தும் விஎம் சுதாகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “என்னுடைய அருமை நண்பர் வி.எம்.சுதாகர் நம்மை விட்டுப் பிரிந்தது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.