இன்று பிறந்தநாள் கொண்டாடும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கோலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட் சென்று பின்னர் ஹாலிவுட் பக்கம் போய் உலக இசை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தமிழரான ஏ.ஆர். ரஹ்மான். அது மட்டும் அல்ல ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியர்களை பெருமை அடைய செய்தார். அத்தகைய சாதனை நாயகன் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
புகழின் உச்சிக்கே சென்ற போதிலும் தலைக்கனம் இல்லாதவர் ரஹ்மான். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று சொல்லும் ரஹ்மானுக்கு ஹேட்டர்ஸே இல்லை எனலாம். ரஹ்மானுக்கும், சாய்ரா பானுவுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு கதீஜா, ரஹீமா, அமீன் என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகள் கதீஜாவுக்கு திருமணமாகிவிட்டது. இரு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற ரஹ்மான், இன்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் தொடர்ந்து பெரிய படங்களில் பணிபுரிந்து வருகிறார்.