செவிலியர்களின் போராட்டம் சிலரின் தூண்டுதலின் பேரில் தான் நடக்கிறது என்றும், இது உங்களுக்கான அரசு. உங்களை ஒருபோதும் கைவிடாது. ஒருவருக்கு கூட பணி பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் சென்னையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
செவிலியர் சங்க நிர்வாகிகளை மூன்று மணிக்கு நேரில் அழைத்து இருக்கிறேன். போராட்டம் நடத்துபவர்களுக்கு நன்றாகவே தெரியும் அவர்களுக்கு எந்த பணி பாதிப்பும் இல்லை பாதுகாப்புதான். ஏனென்றால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2300 பேருக்கு முதல்வர் வழிகாட்டுதல் படி மீண்டும் பணி அமர்த்துவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டு உள்ளது. அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையிலான டிஸ்டிரிக்ட் ஹெல்த் சொசைட்டி என்ற அமைப்பின் மூலம் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட இருக்கிறார்கள். இனிமேல் சம்பளம் 18 ஆயிரம் 2,300 பேரும் பணியில் அமர்த்தப்படுவதற்கான எல்லா அரசாணைகளையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்டிருந்த ஊதியம் 14 ஆயிரம். இனிமேல் அவர்கள் பெற இருக்கும் சம்பளம் 18 ஆயிரம். அதையும் கடந்து இவர்கள் ஏற்கனவே கொரோனா பணியில் நியமிக்கப்பட்டவரகள் என்பதால் ஏதாவது தலைநகரங்களில் மட்டுமே அதாவது சென்னை, கோவை சேலம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே பிரதானமாக பணியில் அமர்த்தப்பட்டார்கள்.
குக்கிராமத்தில் இருந்து வந்த செவிலியர் சென்னையில் தங்கியிருந்து 14 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால், டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி மூலமாக பணியில் அமர்த்தப்படும் போது அவர்கள் சொந்த ஊரிலேயே அவர்களுக்கு பாதுகாப்பான பணி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது அதை இந்த அரசு செய்து கொண்டிருக்கிறது. பணி நிரந்தரம் செய்யப்படுவது என்பது உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் உத்தரவு என்ன சொல்கிறது என்றால் இட ஒதுக்கீடு அடிப்படையில் சரியாக அந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு இருக்க வேண்டும். இது பாதுகாப்பான அரசு சான்றிதழ் சரிபார்ப்பு கூட இல்லாமல் 2020 ஏப்ரலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பணியில் அமர்த்தியிருக்கிறார்கள். செய்த தவறு எல்லாம் அவர்கள் செய்து விட்டு இப்போது இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யுங்கள் என்று சொல்வது எந்த அளவுக்கு சரியான விஷயம் என்று எனக்கு தெரியவில்லை. இதை யார் தூண்டி விட்டாலும் உணர வேண்டியவர்கள் செவிலியர்கள். உங்களுக்கு இந்த அரசு பாதுகாப்பான அரசு. காரண காரியங்களை அறிந்து போராடனும் உங்களை ஒருபோதும் கைவிடாது. ஒருவருக்கு கூட பணி பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே போராட்டங்கள் நடத்துவது என்பது ஜனநாயக ரீதியில் ஏற்றுக்கொள்ள வேண்டியது என்றாலும் போராடுவதற்கு முன்னாள் அதற்கான காரண காரியங்களை அறிந்து கொண்டு போராடுவது அவசியம். இவ்வாறு அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசினார்.