திரைத் துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இரும்பன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் திரைத் துறையின் மூலம் அரசியலிலும் மாற்றம் ஏற்படுத்த முடியும். எந்த உலகத்திலும் இப்படி இல்லை. திரைத்துறையில் முதல்வர்களை தேடுவதும் இங்கு உண்டு. அந்த வகையில் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதல்வர்களாகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். தமிழக அரசியலில் 50 ஆண்டுகள் திரைத்துறையின் பங்கு இருக்கிறது. திரைத்துறையில் பலமானவர்களாக நிறைய பேர் இருந்திருக்கிறார்கள். சினிமாவுக்கு திராவிட அரசியலை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு உண்டு. எம்ஜிஆரின் அழகுக்காக ஆட்சியைப் பிடிக்கவில்லை. அரசியல் பேசினார். சமூக நீதி அரசியல், தொழிலாளிகளின் அரசியலை பேசினார். சமூகம் சார்ந்த பிரச்சினைகள் 50 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படங்களில் பேசப்பட்டு இருக்கிறது. எம்ஜிஆர் தனது அணுகுமுறைகள் காரணமாக மக்களை பெருமளவு ஈர்த்தார். இதனால் அவரை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். மக்களையும் அவர் நேசித்தார்.
சமூக மாற்றத்திற்கான ஆயுதமாகவும் சினிமாவை பயன்படுத்தலாம். சினிமா என்பது மிகப்பெரிய ஆயுதம். சினிமா சமூக மாற்றத்திற்கான கருவியாக தான் இருக்க வேண்டும். திரை உலகம் கார்ப்பரேட் மயம் ஆகி வருகிறது. கார்ப்பரேட் மயம் ஆவதை தடுக்க போராட வேண்டி உள்ளது. ஒரு நபர் இங்கு பெரும் பணம் கொண்டு வருகிறார்கள். எல்லாவற்றையும் கார்ப்பரேட் மயம் ஆக்குவது ஆபத்தானது. ஒரு நபர் கையில் திரையரங்குகள் வந்து விட்டால் என்ன ஆகும்.. திரை துறை கார்ப்பரேட் மயத்துக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் விநியோகஸ்தர்கள் இயக்குனர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இது வெறும் தொழில் போட்டி மட்டுமல்ல. இது தொழிலாளிகளின் உரிமைகளை வெகுவாக பறிக்கும். நான் யாருக்கும் எதிராக பேசவில்லை. எனக்கும் சமூக பொறுப்பு உள்ளது. சமூக நீதி பேசுவோர் கையில் திரைத் துறை இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.