விளைநிலங்களை என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்திற்கெதிராக நடைபயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 25000 ஏக்கர் விளை நிலங்களை என்எல்சி நிர்வாகம் கையகப்படுத்தும் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இரண்டு நாள் எழுச்சி நடைபயணம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி, வாணதிராயபுரம் கிராமத்தில் மக்களிடையே நோட்டீஸ் கொடுத்து. என்.எல்.சி. குறித்துப் பேசினார். அவர் கூறியதாவது:-
49 கிராமங்களில் இருந்து, 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் என்எல்சி நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என 2 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். இது 49 கிராமங்களுக்கு மட்டுமான சாதாரண பிரச்சனை கிடையாது, மாவட்டத்தின் பிரச்சனை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனது கிராமத்திற்குள் அவர்கள் வரவில்லை, எனது நிலத்தை அவர்கள் எடுக்கவில்லை என நினைக்க வேண்டாம். என்எல்சி நிர்வாகம் 66 ஆண்டு காலத்திற்கு முன்பு 37 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை பிடுங்கிக் கொண்டது. என்.எல்.சி. நிறுவனம் இன்று வரை நிலங்கள் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை. அன்று நிலம் கொடுத்தவர்களில் ஒருவர் கூட இன்று வேலையில் இல்லை. நிலம் கொடுத்தவர்களில் 1800 பேருக்கு வேலை கொடுத்தார்கள், அவர்கள் இன்று பணியிலும் இல்லை. பணி ஓய்வு பெற்றுவிட்டார்கள். அன்றில் இருந்து இன்று வரை என்எல்சி நிர்வாகம் நம்மை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது.
அரசியலுக்காக, ஓட்டு கேட்டு உங்கள் முன்பு நான் வரவில்லை. இது தேர்தல் பிரச்சாரமும் இல்லை. நமது மண், மக்கள், வாழ்வாதார, விவசாய, தண்ணீர், சுற்றுசூழல் சார்ந்த பிரச்சனை. தற்போது என் கிராமம் வரவில்லை என இன்று நீங்கள் அமைதியாக இருந்தால், பிற்காலத்தில் உங்களின் நிலமும் பாதிக்கப்படும். உங்களின் பிள்ளைகள் பாதிப்பை சந்திப்பார்கள். ஏனென்றால் என்எல்சி நிறுவனம் அப்படியான நிறுவனம். இதற்கு உடந்தையாக இருப்பது யார் தெரியுமா? நீங்கள் நம்பி வாக்களித்து அனுப்பி வைத்த 2 அமைச்சர்களும், இம்மாவட்டத்தின் பிற சட்டமன்ற உறுப்பினர்களும் தான். மண்ணையும், மக்களின் வாழ்வாதாரத்தையும், விவசாயத்தையும் காப்பதே அமைச்சரின் வேலை. உங்களின் நிலத்தை பிடுங்கி என்எல்சிக்கு வழங்குவேன் என இந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு அமைச்சர் வேளாண்துறை அமைச்சர். அவரின் வேலை என்ன? வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் வேலை தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளை பாதுகாப்பது, விவசாய மண்ணை பாதுகாப்பதே ஆகும். எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் என்எல்சி நிர்வாகமே நீயே நிலத்தை எடுத்துக்கொள், நீ நிலத்தை நாசப்படுத்திக்கொள் என அமைச்சர் கூறினால் அதனை பார்த்துக்கொண்டு நாம் சும்மா இருக்க முடியுமா?
இந்த மாவட்டத்தில் முட்டம் இராமசாமி கிருஷ்ணமூர்த்தி என்ற போராளி வாழ்ந்து வந்தார். அவர் 89ல் மறைந்தார். இந்த மண்ணில் மக்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் ஓடோடி வந்து போராட்டம் செய்தவர் முட்டம் இராமசாமி கிருஷ்ணமூர்த்தி. அவர் யார் தெரியுமா? எம்.ஆர்.கே தான். அப்படிப்பட்டவரின் மகன் தான் இன்றைய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம். இப்படிப்பட்டவருக்கு மகனாக பிறந்தவர் ஏன் இப்படி இருக்கிறார்? உங்களின் அப்பா மக்களுக்கு பிரச்சனை என்றால் ஓடோடி சென்று மண்ணையும், மக்களையும், விவசாயத்தையும் போராடி காப்பாற்றினார். நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் விவசாயத்தை அழித்து, மக்களையும், மண்ணையும் பற்றி கவலை இல்லாமல் என்எல்சி க்கு எப்படியாவது பிடுங்கி கொடுத்து விடவேண்டும் என துடிக்கிறீர்களே.. ஏன்?.. என்ன காரணம்?. நான் இங்கு அமைச்சரை பற்றி பேச வரவில்லை. ஆனால், தற்போதைய சூழலை பார்த்தால் எனக்கே சந்தேகம் வருகிறது. விவசாயத்துறை அமைச்சர் விவசாயம் செழுமையாக இருக்கிறதா? பசுமையாக இருக்கிறதா? அதற்கு என்ன தேவை என்பதை கண்காணிக்காமல் காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை வைத்துக்கொண்டு விவசாய நிலத்தை பிடுங்கி என்எல்சிக்கு கொடுக்க காரணம் என்ன?
என்எல்சி நிறுவனம் 2 ஆண்டுக்குள் தனியாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொது நிறுவனத்தை விற்பனை செய்து பணமாக்கும் நடவடிக்கையின் கீழ் என்எல்சி நிர்வாகம் 2025 க்குள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துவிட்டது. நாடாளுமன்றத்தில் எதை கூறினாலும் அது உண்மை. உண்மையை தவிர அங்கு வேறேதும் பேச முடியாது. இப்படி 2 ஆண்டுக்குள் என்எல்சி நிர்வாகத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துவிட்டால், உங்களுக்கு எதற்கு 25 ஆயிரம் ஏக்கர் நிலம் வேண்டும்? இதே தமிழக அரசு கோவை அன்னூரில் தொழிற்பூங்கா தொடங்க 3500 ஏக்கர் கையகப்படுத்துவதாக அறிவித்தது. அதில் 2000 ஏக்கர் நிலம் அரசு நிலம். 1500 ஏக்கர் தனியாருக்கு சொந்தமானது. 1500 ஏக்கரில் விவசாயம் நடந்து வந்ததாக கூறப்பட்டது. 1500 ஏக்கர் விவசாய நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்த கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமி சென்று போராடுகிறார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உட்பட பல கட்சியினர் போராடுகிறார்கள். நெல், வாழை, பலா, கருப்பு என முப்போகம் விளையும் 25000 ஏக்கர் நிலத்தை எடுக்கக்கூடாது என யாராவது வந்து போராடினார்களா? குரல் கொடுத்தார்களா? கொங்கும் இதுவும் வேறு வேறு மண்ணா?.அங்குள்ள மக்களும், இங்குள்ள மக்களும் வேறா? இதுவும் விவசாய நிலம்தான், இங்கும் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களே?
தமிழகத்தில் இதுபோன்று 25000 ஏக்கர் விளைநிலங்கள் ஒரே இடத்தில் எடுக்கும் திட்டம் எங்குமே கிடையாது. இங்கு நடைபெறுகிறது. வாய் பேசாமல் பல அரசியல் கட்சிகள் உள்ளது. தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வருவார்கள். மக்களுக்கு பிரச்சனை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே உங்களுடன் இருக்கும். எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. இந்த தொகுதியில் 400 வாக்குகளில் தோல்வி, விருத்தாசலத்தில் 300 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றனர். நீங்கள் வாக்களித்தவர்கள் இன்று உங்களுடன் இல்லை. நீங்கள் வாக்களித்தவர்கள் A நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துகொண்டு உங்களின் நிலத்தை கொள்ளையடிக்க நினைக்கிறார்கள். அதற்கான முயற்சியை எடுக்கிறார்கள். உங்களை ஏமாற்றி கொள்ளையடிக்க அனைவரும் சேர்ந்துள்ளார்கள். நாங்கள் அதற்கு விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.