முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பிரதமர் மோடி கொலை செய்துவிட்டதாக அதிமுக முன்னாள் நிர்வாகியும் தற்போதைய விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ.வுமான மார்க்கண்டேயன் குற்றம்சாட்டியிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளம் சட்டசபை தொகுதியில் 2011-ம் ஆன்டு முதல் 2016-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மார்க்கண்டேயன். ஜெயலலிதா மறைவின் போதும் அதிமுகவில் இருந்தார். பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2021 சட்டசபை தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வானார். இதனிடையே விளாத்திகுளம் அருகே பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மார்க்கண்டேயன், ஜெயலலிதா இறக்கும்வரை அதிமுகவில் நானும் இருந்தேன். ஜெயலலிதா இறந்துவிட்டார். ஜெயலலிதாவை மோடிதான் கொலை செய்துவிட்டார். ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக போட்டியிடப் போவதாக கூறியதால் பாஜக அவரை கொலை செய்துவிட்டது. இதனை பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறோம். பிரதமர் தேர்தலில் தங்களுக்கு போட்டியாக இருக்கக் கூடாது என்பதற்காக கொலை செய்துவிட்டனர் என பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டுள்ளது.
விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசிய வீடியோவை ஆங்கில சப் டைட்டிலுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்று இரவு 10.54 மணிக்குப் பகிர்ந்துள்ளார். அதில், திமுக எம்.எல்.ஏ.க்கள் எப்போதும் பல பொய்களை தொடர்ந்து கூறி வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் அமைதியாக இருக்கக் கூடாது; தமிழக பாஜகவும் எப்போதுமே அமைதியாக இருக்காது என எச்சரிக்கை விடுத்துள்ளார் அண்ணாமலை.