காஷ்மீர் அரசியல் சாசனத்தை அழித்தது போல, ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜக தயாராகி வருவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி குற்றம்சாட்டினார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது முதலாகவே, பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் மெகபூபா முப்தி கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில், ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மெகபூபா முப்தி, பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் பேசியதாவது:-
இந்திய மக்களின் தயவால் மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக, இன்று அதே மக்களை தங்கள் காலில் போட்டு நசுக்கி வருகிறது. மத்திய அரசு என்ன செய்தாலும் மக்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அதையும் மீறி, மத்திய அரசையோ, பாஜகவையோ யாராவது விமர்சித்தால் உடனடியாக அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துவிடுகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் அவர்கள் மீது ஏவிவிடப்படுகின்றன. அடக்குமுறையை தங்கள் ஆயுதமாக பாஜக கையாண்டு வருகிறது. இவ்வாறு அடக்குமுறையின் மூலமாகவும், சர்வாதிகாரத்தின் வாயிலாகவும் தங்களை நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்ளலாம் என பாஜகவினர் நினைக்கின்றனர். அவர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். ஒருபோதும் சர்வாதிகாரத்திற்கு நிரந்தர வெற்றி கிடைத்ததில்லை. இதற்கு பல உலக வரலாறுகள் சாட்சியாக இருக்கின்றன. அமெரிக்க அரசுக்கு பயந்து அந்நாட்டு மக்கள் அமைதி காத்திருந்தால், வியட்நாமில் இருந்து அமெரிக்கா வெளியேறி இருக்காது. அதேபோல, வங்க மக்கள் பாகிஸ்தானின் அடக்குமுறைக்கு அஞ்சியிருந்தால், இன்று வங்கதேசம் என்ற நாடே உருவாகி இருக்காது. எனவே, சர்வாதிகாரத்தால் மக்கள் வெகுநாட்களுக்கு அடக்கி வைக்க முடியாது. அந்த வகையில், பாஜகவின் சர்வாதிகாரமும் விரைவில் முடிவுக்கு வரும்.
மத்திய பாஜக அரசு தங்களுக்கு ஏற்றவாறு இந்திய அரசியல் சாசனத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறது. காஷ்மீர் அரசியல் சாசனத்தை முற்றிலுமாக அழித்தது போல, இந்திய அரசியல் சாசனத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இன்னும் சிறிது விட்டால் கூட, நம் முன்னோர்கள் ரத்தம் சிந்தி ஏற்றிய நம் தேசியக் கொடியை தூக்கியெறிந்துவிட்டு, அக்கட்சியின் கொடியான காவிக்கொடியை பறக்கவிட்டு விடும்.
ஒருகாலத்தில், நமது தேசத்தில் நீதித்துறை சுதந்திரமாகவும், அதிகாரமிக்கதாகவும் இருந்தது. பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் அளவுக்கு நமது நீதித்துறை விளங்கியது. ஆனால், இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிக்குபவர்களுக்கு ஜாமீன் கொடுக்க கூட நீதிமன்றங்கள் பயப்படுகின்றன. இதை நான் சொல்லவில்லை. நமது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சொல்கிறார். நீதித்துறைக்கு தான் இந்த கதி என்று பார்த்தால், உண்மையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய ஊடகங்களும் பாஜகவின் கைக்குள் சென்றுவிட்டது. ஆனால், இந்த அடக்குமுறை நீண்டகாலம் நீடிக்காது. இந்தியர்கள் ஒருபோதும் கோட்சேவின் இந்தியாவை ஏற்க மாட்டோம். இவ்வாறு மெகபூபா முப்தி பேசினார்.