தேசிய கீதம் முடியும் வரை சட்டசபையில் ஆளுநர் இருந்திருக்கலாம். அப்படி இல்லாமல் அவர் வெளியேறியது நாட்டையே அவமதிப்பது போன்றது என்று தமிழக சட்டசபை சபாநாயகர் கூறியுள்ளார்.
பரபரப்பான சூழ்நிலையில் இன்று காலையில் சட்டசபை கூடியது. ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று அரசின் சாதனைகளை உரையை வாசித்தார். ஆளுநர் உரையை வாசிக்கத் தொடங்கும் போதே திமுக கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டமிட்டனர். ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தனர். பல்வேறு கூச்சல் குழப்பங்களுக்கு மத்தியில் இன்றைய தினம் ஆளுநர் தனது உரையை நிறைவு செய்தார். அவர் தனது உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் என்ற வார்த்தைகளையும் அம்பேத்கர், பெரியார், அண்ணா பெயரையும் வாசிக்கவில்லை. அதோடு தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்பதையும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிடவில்லை. ஆங்கில உரைக்குப் பின்னர் சபாநாயகர் அப்பாவு அந்த உரையை தமிழில் வாசித்தார். அரசு எழுதிக்கொடுத்த உரையை அப்படியே வாசிக்காத ஆளுநரைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கூச்சலிட்டனர்.
இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, ஆளுநர் அவர்களுக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன. நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் மாண்புமிகு ஆளுநர் அவர்களுடைய செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி, ஆளுநர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை. பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உரையாற்ற வந்துள்ள மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, மாண்புமிகு ஆளுநர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக, முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.
ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு, மாண்புமிகு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் ஏற வேண்டும் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன். இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்றார். இதை தொடர்ந்து ஆளுநர் உரையை கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.