ஆளுநரை தங்களின் புகழ் சித்தாந்தத்தை பாடக்கூடியவராக நினைக்கக் கூடாது என்றும், ஆளுங்கட்சியின் போக்கு மாநில நலனுக்கு உகந்தது அல்ல என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “சட்டசபை விதிகளின் படி அரசு தயாரித்து கொடுத்ததை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும். அது விதி மீறல். ஆளுநரின் இந்த செயல் வருத்தம் தருவதால் அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறேன்” என்று கூறினார். இதையடுத்து ஆளுநர் படித்த உரை, வாக்கெடுப்பு மூலம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மாறாக அரசு தயாரித்த மொத்த உரையும் அவை குறிப்பில் இடம்பெற்றது. அந்த உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த உரையை நிகழ்த்தும் போது ஆளுநர் ஆர். என் ரவி பாதியில் அவையில் இருந்தே வெளியேறினார்.
இந்த நிலையில், நீங்கள் நினைக்கிறதை சொல்வதை கவர்னர் செய்யவில்லை என்பதற்காக அவரை கூப்பிட்டு வைத்து தமிழக சட்டப்பேரவையில் அசிங்கபடுத்துவீங்களா? என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-
எந்த உரைகளை தவிர்த்து பேசினாரோ அது குறித்து ஆளுநர் அலுவலகத்தில் தான் மாநில அரசு பேச வேண்டும். ஆனால் ஒரு மாநில அரசு ஆளுநரின் உரையைக்கூட சரியாக அவரிடம் பேசி ஒப்புதல் வாங்காமல் அச்சிட்டு வருகிறீர்கள் என்றால் நீங்கள் அதிகாரத்தை கவர்னர் மீது காட்ட வேண்டும் என்று நினைக்கிறீங்களா.. இல்லை நீங்கள் நினைப்பதைத்தான் கவர்னர் பேச வேண்டும் என்று நினைக்கிறீங்களா.. இந்த விஷயங்களை பொறுத்தவரை மாநில அரசு அவர்களுடைய உறவு பேணாத நிலைமையை காட்டுகிறது. இன்றைக்கு இருக்கும் நிலைமை என்ன? இது ஆளுநர் மீதான தனிப்பட்ட தாக்குதலாகும். ஆளுநர் பேசி முடித்த பிறகு முதல்வர் அவருக்கான ஜஸ்டிபிகேஷனை சொல்கிறார். ஆனால் இன்றைக்கு இருக்கும் நிலைமை என்ன? ஆளும் கட்சிக்கோ அரசாங்கத்திற்கோ செய்தி தொடர்பாளர் உண்டு. இங்க இருக்கும் அமைச்சர்கள் பேசுவாங்க. ஆனால் கவர்னர் அலுவலகம் வழக்கமாக எந்த ஒரு விஷயங்களையும் வெளியில் சொல்லும் வாய்ப்பு கிடையாது.
நீட் விஷயத்தை பொறுத்தவரைக்கும் தேவையான தகவல்களை கொடுத்து இருக்கிறோம் என்று இந்த மாநில அரசு சொல்கிறது. வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஆளுநர் என்ன விளக்கத்தை கேட்டார்.. அரசு என்ன விளக்கத்தை கொடுத்தது என்று ஏன் மக்கள் முன்னாள் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நீங்கள் நினைக்கிறதை சொல்வதை கவர்னர் செய்யவில்லை என்பதற்காக அவரை கூப்பிட்டு வைத்து தமிழக சட்டப்பேரவையில் அசிங்கபடுத்துவீங்களா? இதுதான் உங்களின் ஜனநாயக போக்கா? இப்படித்தான் ஒரு கட்சி நடந்து கொள்ள வேண்டுமா? மிக மிக தவறான முன்னுதாரணத்தை ஆளும் கட்சியும் முதல்வரும் இங்கே நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடைய தயவினால் எம்.எல்.ஏ ஆனவர்கள் இவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுகிறார்கள். இதுதான் இங்கே இன்று நடந்துள்ளது. இவ்வாறு வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ பேசினார்.