எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை: சமந்தா!

சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் சாகுந்தலம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை என்று கூறினார்.

சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. படத்தின் கதை மற்றும் இயக்கத்தை ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் ஏற்றுள்ளார். மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாப்பாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர். மிகவும் புகழ்பெற்ற சாகுந்தலை புராணக் கதையில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் சாகுந்தலா – துஷ்யந்த் மகன் மற்றும் இளவரசர் பரதன் கதாப்பாத்திரத்தை அல்லு அர்ஜூன் மகள் அல்லு அர்ஹா ஏற்றுள்ளார். இந்த திரைப்படம் பிப்ரவரி 17ஆம் நாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 3டியிலும் இந்தப் படத்தை திரையரங்குகளில் காணலாம் என படக்குழு தெரிவித்துள்ளது.

இவ்விழாவில் இயக்குநர் குணசேகரன் பேசும்போது, இப்படத்தின் உண்மையான ஹீரோ சமந்தாதான் என்று பாராட்டினார். அவரது பேச்சைக்கேட்ட சமந்தா உணர்ச்சிவசப்பட்டு அழுதார். மேலும், இயக்குநர் குணசேகரன் சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றதாகவும், ஆனால் தயாரிப்பாளர் நீலிமா சமந்தாதான் நடிக்க வேண்டும் எனக் கூறியதாக தெரிவித்தார்.

விழாவில் நடிகை சமந்தா பேசியதாவது:-

இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது. சாகுந்தலம் டிரைலர் வெளியீட்டு விழா வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் ஒன்று மாறாது. நான் சினிமாவை நேசிக்கிறேன், சினிமா என்னை மீண்டும் நேசிக்கிறது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை. இந்திய இலக்கிய வரலாற்றில், சகுந்தலாவின் கதை மறக்க முடியாத ஒன்றாகும். குணசேகர் சார் என்னை இந்தக் கேரக்டருக்குத் தேர்ந்தெடுத்தது என் அதிர்ஷ்டம். இது உண்மையிலேயே எனது பாக்கியம். இவ்வாறு அவர் கூறினார்.