கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!

பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்து முன்னணி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சினிமா ஸ்டண்ட் இயக்குனரும், இந்து முன்னணி பிரமுகருமான கனல் கண்ணன், “ஸ்ரீரங்கத்தில் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்” என கூறியிருந்தார். கனல் கண்ணனின் இந்த பேச்சினுடைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனல் கண்ணன் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்தார். இதனையடுத்து நிபந்தனை ஜாமினை நீதிமன்றம் வழங்கியது. இதனையடுத்து சிறையில் இருந்து வெளிவந்தார் கனல் கண்ணன்.

இந்நிலையில் தான் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பிரமுகர் குமரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஒன்றை செய்திருந்தார். அதில், வழக்குப்பதிவு செய்து ஐந்து மாதங்களாகியும் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், பெரியார் சிலை பற்றி சர்ச்சையாகப் பேசிய கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் இவ்வழக்கின் விசாரணை மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது.