பெங்களூரில் இடிந்து விழுந்த மெட்ரோ ரயில் பில்லரால் தாய், குழந்தை உயிரிழப்பு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் போது இரும்பு தூண் சரிந்து விழுந்த விபத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற தாய், அவரது குழந்தை உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரின் நாகவரா பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. கல்யாண் நகரில் இருந்து எச்.ஆர்.பி.ஆர். பகுதி வழித்தடத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலத்துக்காக தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நாகவரா பகுதியில் இன்று காலை 11 மணி அளவில் மெட்ரோ ரயில் பாதைக்கான தூண் ஒன்று இடிந்து சாலையில் விழுந்தது. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 4 பேர் மீது தூண் விழுந்தது. இதில் அவர்கள் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கணவன் – மனைவி, அவர்களது மகன், மகள் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி தாய் மற்றும் அவரது 2 வயது மகன் உயிரிழந்தனர். தந்தை, மகள் ஆகியோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் உயிரிழந்தவர் பெயர் தேஜஸ்வனி என்பதும், அவரது கணவர் லோஹித் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததும் தெரிய வந்துள்ளது.

தூண் இடிந்து விழுந்ததை அடுத்து அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து வாகன போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் கிடந்த இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது. தூண் இடிந்து விழுந்ததற்கான காரணத்தை ஆய்வு செய்ய விபத்து நடந்த இடத்திற்கு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்து சம்பவம் பற்றி கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, 40% கமிஷன் அரசின் விளைவு இது. வளர்ச்சி பணிகளில் எந்தவித தரம் சார்ந்த விசயமும் இல்லை என குற்றச்சாட்டாக கூறினார்.

கர்நாடகாவில், அரசு துறைகளில் 40 சதவீத கமிஷன் வாங்கி கொண்டே கட்டுமானம் சார்ந்த பணிகள் நடக்கின்றன என நீண்டகால குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இதனால், ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்த ஈசுவரப்பா என்பவர் மந்திரி பதவியில் இருந்து விலகினார். இந்த சம்பவத்தில் குற்றச்சாட்டு தெரிவித்த கட்டுமான அதிபர் ஒருவர் தற்கொலை செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தொடர்ந்து, கட்டுமான பணிகளுக்கான சங்கத்தின் தலைவரும் இதேபோன்ற அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன் வைத்ததற்காக கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில், கர்நாடக மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்து உள்ளது.