நான் ஒரு அடையாளத்துக்காக அரசியல் செய்பவன் அல்ல, விளம்பரத்துக்கு செய்பவன் அல்ல. உண்மையாக, உணர்வுபூர்வமாக செய்பவன் என நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் பசுமைத்தாயகம் மற்றும் கொங்கு பகுதியில் உள்ள சமூகத் தொண்டு அமைப்புகள் நடத்தின. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பசுமை தாயகத்தின் முன்னாள் தலைவரும், பாமக தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
40 ஆண்டுகளுக்கு முன்பு நொய்யல் ஆற்றில் உள்ள நீரினை அள்ளி குடிக்கலாம். 2500 ஆண்டுகள் இந்த நொய்யலாற்றுக்கு வரலாறு இருக்கிறது. அப்பொழுதே கிரேக்க, ரோமானியர்களுடன் வணிகம் செய்த தொல்லியல் ஆவணங்கள் இருக்கின்றன. மான்செஸ்டர் ஆப் இந்தியா என்று நாம் சொல்வது கோயம்புத்தூர். அது நமக்கு பெருமையாக இருக்கும். ஆனால் அந்த காலத்தில் இது போன்ற ஒரு பெயரை உருவாக்குவதற்கு என்ன செய்தார்கள்? அந்நேரம் மின்சாரம் கிடையாது நீராவி மூலமாகத்தான் அன்றைய காலத்தில் தொழிற்சாலைகள் இயங்கின. இதற்கு தேவையான மரங்களை வெள்ளியங்கிரி மலையில் இருந்த காடுகளை அழித்து தான் எடுத்தார்கள். அப்படி உருவாக்கியதுதான் கோயம்புத்தூர் என்ற நகரம். அன்று ஆரம்பித்தது இன்று அழிவில் நிற்கிறது.
கூவம் என்றால் நாம் மூக்கை பிடிப்போம், முகத்தை சுழிப்போம். ஆனால் எத்தனை பேருக்கு தெரியும். திருவள்ளூர் அருகே உள்ள கூவம் எனும் கிராமத்திலிருந்து தான் இந்த கூவம் நதி தொடங்குகிறது. அங்கிருந்து சென்னைக்கு 72 கிலோமீட்டர் பயணித்து நேப்பியர் பாலத்தில் முடிகிறது கூவம் நதி. இன்றும் இந்த கூவம் நதியின் முதல் 60 கிலோ மீட்டர் தண்ணீரை குடிக்கலாம், விவசாயம் செய்யலாம். இந்த கூவம் நதி எப்போது சென்னையின் நுழைவாயிலை தொடுகிறதோ அது முதல் சாக்கடையாக மாறுகிறது. அந்த கூவம் நதியை சரி செய்வதற்காக எத்தனையோ அரசுகள், எத்தனையோ ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்திருக்கிறார்கள்.
அதே போல் தான் நொய்யல் ஆறும் ஆரம்பத்தில் தூய்மையான நீராகத்தான் வருகிறது. நொய்யல் ஆற்றை நம் நான்கு கட்டங்களாக பிரித்து கொள்வோம். மலையடிவாரத்தில் இருந்து பேரூர் வரை ஒரு கட்டம், பேரூர் முதல் சாம்பலாபுரம் ஏரி வரை இரண்டாவது கட்டம், சாம்பலாபுரம் ஏரி முதல் ஒரத்தப்பாளையம் அணை வரை மூன்றாவது கட்டம், ஒரத்தப்பாளையம் அணையில் இருந்து காவிரியில் சேருகின்ற கிராமமான நொய்யல் வரை நான்காவது கட்டம். கரூர் மாவட்டத்தில் இருக்கின்ற அந்த நொய்யல் கிராமத்தின் பெயர் தான் நொய்யல் ஆற்றுக்கு பெயராக வருகிறது. இந்த நான்கு கட்டங்களில் முதல் கட்டம் நன்றாக இருக்கிறது. நான்காவது கட்டம் ஓரளவுக்கு பரவாயில்லை. மூன்றாவது கட்டம் தான் மாசுக்களில், கழிவுகளில் 90 சதவீதம் நொய்யல் ஆற்றை கெடுப்பது. இந்த மூன்றாவது கட்டமான சாம்பலாபுரம் ஏரி முதல் ஒரத்தப்பாளையம் அணை வரையும் உள்ள பகுதி தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. பிரச்சனையை மட்டும் நான் பேசுவதற்காக வரவில்லை. இந்த பிரச்சனைக்கான உண்டான தீர்வையும் சொல்ல வந்திருக்கிறேன். இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் தான் நான் இங்கு வந்திருக்கிறேன்.
நான் ஒரு அடையாளத்துக்காக அரசியல் செய்பவன் அல்ல, விளம்பரத்துக்கு செய்பவன் அல்ல. உண்மையாக, உணர்வுபூர்வமாக செய்பவன். நான் மத்திய அமைச்சராக இருந்த நேரத்தில் புகைப்பொருள் லாபியை எதிர்த்து தன்னந்தனியாக போராடினேன். எனக்கு யாருமே அந்த நேரத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியாவில் புகையிலை லாபி என்பது உலகத்திலேயே மிகப்பெரிய லாபி. அது ஒரு மாஃபியா கும்பல், அதனை எதிர்த்து தான் இந்தியாவின் பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற சட்டத்தை கொண்டு வந்தவன் நான். புகையிலை துணிவாக கொண்டு வந்தவன் நான். அதே போல் புகையிலைப் பொருட்களில் எச்சரிக்கை விளம்பரம் கொடுக்க வேண்டும் என்ற என்னுடைய சட்டத்திற்கு சக அமைச்சர்களே எதிர்த்தார்கள். நாடாளுமன்றத்தில் 140 எம்பிக்கள் அதனை எதிர்த்தார்கள். எத்தனையோ முதலமைச்சர்கள் அதனை எதிர்த்தார்கள். அதை பற்றி நான் பொருட்படுத்த கூட இல்லை. தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய இளைஞர்கள் நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் புகையிலைப் பொருட்களில் எச்சரிக்கை விளம்பரத்தை கொண்டு வந்தேன்.
குட்கா லாபி எவ்வளவு பெரிய லாபி தெரியுமா? இந்தியாவில் அதை தடை செய்தவன் நான். எந்த நம்பிக்கையில் இதை அனைத்தையும் செய்தேன் தெரியுமா? தன்னம்பிக்கையில் தான் செய்தேன். நான் அந்த நம்பிக்கையில் தான் தற்போது நான் கொங்கு பகுதிக்கு வந்திருக்கிறேன். நான் இங்கு எதற்காக வந்திருக்கிறேன். என்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் ஒரே ஒரு கையெழுத்தை போட்டு இதற்கு தீர்வு கொண்டு வர முடியும் என்னால். ஆனால், அதிகாரம் என்னிடம் இல்லை. ஆனாலும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தால், நிச்சயமாக இது நடக்கும். நடக்க வைக்க வேண்டும்.
இப்போது நொய்யல் ஆற்றை மீட்டெடுக்க நான் வருகிறேன். என்னை பார்த்து இன்னொரு அரசியல் கட்சி தலைவர் நாங்களும் ‘நொய்யல் ஆற்றைக் காப்போம்’ என்று வருவார், வருவார்கள், வரவேண்டும். அதுதான் என் நோக்கம். அவர்களைப் பார்த்து இன்னொரு அரசியல் கட்சித் தலைவர் வருவார். அன்புமணி எங்கிருந்தோ வந்து, கொங்கு பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார். நாம் கொங்கு பகுதியில் இருக்கிறோம். நாம் இந்த நொய்யல் ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்று களமிறங்க வேண்டும் என்று அவர்களும் களம் இறங்குவார்கள். வரட்டும், வரவேண்டும். அதுதான் என்னுடைய நோக்கம். இது அனைத்துமே நொய்யல் ஆற்றை காப்பாற்ற எடுக்கும் நடவடிக்கை தான். தொடக்க முயற்சி தான். இந்த பிரச்சனையை நான் இத்தோடு விட போறது இல்லை. நான் ஒரு பிரச்சினையை கையில் எடுத்தால், அதை செய்து முடிக்கும் வரை ஓய மாட்டேன்.
தர்மபுரியில் காவேரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று களம் இறங்கினேன். தருமபுரி மாவட்டத்தின் மேற்கு கரையில் காவிரி ஆறு ஓடுகிறது, வடக்கு கரையில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய ஆறுகளில் இரண்டு ஆறுகள் தர்மபுரி மாவட்டத்தில் ஓடுகிறது. ஆனால் தர்மபுரியில் குடிப்பதற்கு சரியான குடிநீர் இல்லை. இது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? நொய்யல் மீளட்டும், கொங்கு செழிக்கட்டும், இந்த கருத்தரங்கம் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு வருகை தந்திருக்கின்ற மேடையில் உள்ள பெரியோர்களுக்கும், இளைஞர்களுக்கும், அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதனை நாங்கள் ஆர்வத்தோடு தான் செய்து கொண்டிருக்கிறோம். இது ஒரு தொடக்க நிகழ்ச்சி, கூட்டம் மட்டும் தான். அடுத்த கட்ட கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தி நிச்சயமாக இந்த நொய்யல் ஆற்றை மீட்டெடுப்போம். நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.
நொய்யல் ஆற்றுக்கு கி.மு. முதலே சரித்திரம் இருக்கிறது. ஏராளமான தொல்லியல் ஆதாரங்கள் நொய்யல் ஆற்றுக்கு உள்ளது. மூவேந்தர்களும் சேர்ந்து நொய்யல் ஆற்றை பாதுகாத்துள்ளனர். நீர் மேலாண்மை திட்டங்களை மூவேந்தர்களும் சேர்ந்து நொய்யல் ஆற்றுக்கு செய்துள்ளனர். இதனை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். சினிமா மூலமாகவும் இளம் தலைமுறையினருக்கு எடுத்து கூறலாம். பொன்னியன் செல்வம் இரண்டாம் பாகம் வரவிருக்கிறது. இப்போது இளைஞர்கள் மத்தியில் துணிவா? வாரிசா? என்ற வாதம் அதிகம் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் டிஎன்ஏ-வில் சினிமா ஊறி இருக்கிறது. அதனாலேயே எங்களை போன்றோர் அரசியலில் முன்னேறுவதற்கு கடினமாக இருக்கிறது. எங்களின் நோக்கம் தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என்பது தான். அதற்காக ஆட்சி அதிகாரம் கையில் இருந்தால், வேகமாக தமிழ்நாட்டை முன்னேற்ற முடியும். நொய்யல் ஆற்றை மீட்க வேண்டும் என்ற நிலை வந்துள்ளது. நொய்யல் நன்றாக இருந்தால் தான் கொங்கு மண்டலம் வளர்ச்சி பெறும். ஒரு காலத்தில் நொய்யல் ஆற்றில் 4.5 லட்சம் ஏக்கர் பாசனம் செய்தார்கள். இந்த ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.