பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு விழாவுக்கு 21 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின், பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும்படி, 21 கட்சிகளுக்கு, அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை வீழ்த்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார்.

இந்த ஒற்றுமைப் பயணம், கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. இதை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை கடந்து, பஞ்சாப் மாநிலத்தில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறார். செல்லும் இடமெல்லாம் ராகுல் காந்திக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். மேலும், அவரது நடைபயணத்தில் பிரபலங்கள், முன்னாள் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ராகுல் காந்தி உடன் உரையாடி வருகின்றனர். பல தரப்பு மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி, அவர்களது குறைகளை கேட்டறிந்து வருகிறார். அவரது இந்த நடைபயணம் வரும் 30 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவு பெறுகிறது.

இந்நிலையில், இந்திய ஒற்றுமைப் பயணத்தின் நிறைவு விழாவில் கலந்து கொள்ளும்படி, 21 கட்சிகளுக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பிதழ் அனுப்பி உள்ளார். மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, முன்னாள் முதலமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு உள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரையின் நிறைவு விழாவில் 21 கட்சிகளும் பங்கேற்கும் பட்சத்தில், அது, எதிர் வரும் மக்களவைத் தேர்தல் கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கும் என, அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

இன்று பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை தொடங்கினார். இதற்காக பஞ்சாப் சென்ற ராகுல் காந்தி நேற்று அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் நேற்று மாலை சிர்ஹிந்த்துக்கு சென்று அங்கு இரவு தங்கினார். இன்று காலை சிர்ஹிந்தில் உள்ள குருத்வாரா பதேகர் சாகிப்புக்கு ராகுல்காந்தி சென்று வழிபட்டார். அப்போது அவர் தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடன் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அமிர்ந்தர்சிங் ராஜா உள்ளிட்ட தலைவர்கள் உடன் சென்றனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:-

இந்திய ஒற்றுமை யாத்திரையில் நான் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், வேலையில்லா இளைஞர்கள் என பலரிடம் பேசினேன். இதன் மூலம் இந்த யாத்திரையில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். பா.ஜ.க, நாட்டில் பயத்தையும், வெறுப்பையும் பரப்புகிறது. ஆனால் இந்தியா, சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் மரியாதைக்காக நிற்கிறது. இதனால்தான் இந்தியா ஒற்றுமை யாத்திரை வெற்றி பெற்றது. பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள். ஒரு மதத்தை இன்னொருவருக்கு எதிராகவும், ஒரு சாதியை இன்னொருவருக்கு எதிராகவும், ஒரு மொழியை இன்னொருவருக்கு எதிராகவும் வைத்து நாட்டின் சூழலை கெடுத்துவிட்டார்கள். எனவே அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் கொண்ட மற்றொரு பாதையை நாட்டுக்கு காட்ட வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகவே இந்த யாத்திரையை தொடங்கியுள்ளோம். இந்த யாத்திரை பொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லும்போது அது சிறப்பாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்சாப்பில் இன்று ராகுல்காந்தி தனது யாத்திரையை சிர்ஹிந்தில் இருந்து தொடங்கினார். பஞ்சாப்பில் தினமும் 25 கி.மீ. தூரத்தை கடக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வருகிற 19ம் தேதி பதன்கோட்டில் யாத்திரை முடிவடைகிறது. பின்னர் ஜம்மு- காஷ்மீருக்குள் நுழைகிறது.