இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா100 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு!

இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பை தடுக்க தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் உள்ள தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தப்பட்டது. இலங்கையில் மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 290க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. இலங்கையில் இதுபோன்ற தாக்குதல் நடக்கவுள்ளதாக ஏப்ரல் 4ஆம் தேதி இந்திய உளவுத்துறை இலங்கையை எச்சரித்திருந்தது. அப்படி இருந்தும் ஈஸ்டர் தினத்தில் இந்தத் தாக்குதல் நடத்தது. இலங்கையில் வசிக்கும் தொழிலதிபரின் மகன்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியது.

இந்தநிலையில் ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு விசாரணையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 மில்லியன் ஸ்ரீலங்கா ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டின் மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றான ஈஸ்டர் தாக்குதல் குறித்து நம்பகமான தகவல்கள் இருந்தும், அதைத் தடுப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக அந்நாட்டு உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள், மனுதாரர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் ஏழு பேர் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் தீர்ப்பளித்தது. தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் தடுக்க இந்தியா பகிர்ந்து கொண்ட விரிவான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் செயல்படத் தவறிவிட்டனர் என்று நீதிமன்றம் கூறியது.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவுக்கு 100 மில்லியன் ரூபாயும், முன்னாள் காவல்துறை தலைவர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் நிலந்த ஜயவர்தனவுக்கு தலா 75 மில்லியன் ரூபாயும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு 50 மில்லியன் ரூபாவும் நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சிசிர மெண்டிஸுக்கு 10 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இழப்பீடு தொகையை சம்பந்தபட்டவர்கள் அவர்களின் தனிப்பட்ட நிதியில் இருந்து செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இழப்பீடு வழங்குவது குறித்து 6 மாதங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.