வடமாநிலத்தவர்களின் வேட்டை காடாக தமிழ்நாடு மாறி வருகிறது: வேல்முருகன்!

வடமாநிலத்தவர்களின் வேட்டை காடாக தமிழ்நாடு மாறி வருவதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

என்எல்சி-க்கு நிலம் கொடுத்தவர்கள் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அங்கு வேலை வாய்ப்பை உறுதி செய்து விட்டு நிலத்தை கையகப்படுத்த வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் வேலை 80 சதவிகிதம் தமிழர்களுக்கு உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். என்எல்சி-யில் வேலையை உறுதி செய்த பின்னரே, நிலத்தை கையகப்படுத்த வர வேண்டும் என்ற கருத்தை சட்டசபையில் வலியுறுத்தி இருக்கிறேன்.

வடமாநிலத்தவர்களால் தமிழ்நாட்டில் கொலை நடக்கிறது. தமிழ்நாட்டில் எந்த இடத்திற்கு சென்றாலும் வடமாநிலத்தவர்கள் தான் இருக்கிறார்கள். டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் வடமாநிலத்தவர்களுக்கு பணி கிடைக்கும் வழியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு வடமாநிலத்தவர்களின் வேட்டை காடாக மாறி வருகிறது. இந்த அபாயத்தை தடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதையெல்லாம் கண்காணிக்க வேண்டும். வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து இருக்கிறது. வட இந்தியர்களால் இன கலவரமாக ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நான் வட மாநில அப்பாவி கூலி தொழிலாளிகளை எதிர்க்கவில்லை. வற்புறுத்தி திணிக்கப்படும் வட மாநிலத்தவர்களை தான் எதிர்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.