ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் பங்கேற்ற நிலையில் எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டார். பாரம்பரியமான உடையில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, அனைவரையும் உற்சாகம் பொங்க வரவேற்றார்.
சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்க முதல் முறையாக மத தலைவர்கள், விவசாயிகள், விளையாட்டு வீரர்கள் உள்பட 1800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். முதல்வர், அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். ஆனால் இம்முறை 1800 பேருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆளுநர் ஆர்,என். ரவியின் உத்தரவுபடி, ஆதீனங்கள், கிறிஸ்தவ பிஷப்புகள், முஸ்லிம் மத குருமார்கள், விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள், விவசாயிகள், தமிழ் ஆர்வலர்கள், சமூக வலைதள பிரபலங்கள், பழங்குடியின மாணவர்கள், சிறப்பாசிரியர்கள், பிரதமரின் ‘மங்கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமரால் பாராட்டப்பட்டவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் என 800க்கும் மேற்பட்டோர் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அனைவரும் எதிர்பார்த்தது போல இந்த விழாவில் பங்கேற்காமல் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் புறக்கணித்து விட்டனர். அதற்கு பதிலாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பரிசுகளை வழங்கி வாழ்த்தி பேசினார். அதே நேரத்தில் ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பலரும் பங்கேற்றனர். ஓ.பன்னீர் செல்வம் அவரது ஆதரவாளர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
ஆளுநர் ஆர்.என் ரவி, அவரது மனைவி ஆகியோர் தமிழகத்தின் பாரம்பரியமான உடையான வேஷ்டி சட்டை, பட்டுப்புடவை அணிந்து விருந்தினர்களை வரவேற்றனர். உற்சாகமாக நடைபெற்ற பொங்கல் விழாவில் கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், காவடி ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் எனத் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 22 வகையான பாரம்பரிய உணவு வகைகள் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்டன.
தமிழ்நாடு ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான கருத்துக்களை பேசி வரும் நிலையில் தற்போது பொங்கல் திருவிழாவில் தமிழ்நாடு என்ற பெயரை தவிர்த்து தமிழகம் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு என்ற பெயரை புறக்கணித்து விட்டு ராஜ்பவனில் பொங்கல் விழா கொண்டாடும் நிலையில் இந்த விழாவில் பங்கேற்காமல் தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.