சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும்: டிஆர் பாலு

சேது சமுத்திர திட்டம் குறித்து பேசுகிற பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முதலில் உச்சநீதிமன்றத்தில் அத்திட்டத்துக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை திரும்பப் பெற வேண்டும் என டி.ஆர்.பாலு எம்பி வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் தன்னிச்சையான போக்கு கடும் கண்டனத்துக்குரியதானது. இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் திமுக எம்பிக்கள் நேற்று புகார் மனு அளித்தனர். திமுக மூத்த தலைவர் டிஆர் பாலு தலைமையிலான இக்குழுவினர், ஆளுநர் ரவிக்கு உரிய அறிவுரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் வலியுறுத்தியது. டெல்லி சென்ற திமுக குழுவினர் இன்று சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு எம்பி கூறியதாவது:-

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது உச்சநீதிமன்றத்தில் இருக்கும் வழக்குதான். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கை பாஜக திரும்பப் பெற வேண்டும். உச்சநீதிமன்ற வழக்கை வாபஸ் பெற்றுவிட்டுதான் சேது சமுத்திரம் குறித்து பாஜக பேச வேண்டும். திராவிட மாடல் என்பது பற்றி எதுவும் தெரியாதவர்கள் பேசுவார்கள். திராவிட மாடல் குறித்து தெரியாதவர்கள் உளறுவார்கள். இப்படி பேசுகிற, உளறுகிற நபர்களுக்கு எல்லாம் திமுகவினர் பதில் சொல்ல மாட்டார்கள். சமூக நீதியை நாம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பேசுகிறோம். சமூக நீதி எனும் பேசுகிற போது தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், கருணாநிதி பற்றி பேசாமலா இருக்க முடியும்?

டெல்லியில் ஆளுநருக்கு எதிராக ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் மனு கொடுத்தோம். ஆளுநர் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசியதை பொதுவெளியில் பகிரங்கப்படுத்த முடியாது. நாங்கள் டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்த நிலையில்தான் ஆளுநர் ரவியும் டெல்லி புறப்புட்டு சென்றுள்ளார். ஜனாதிபதியை நாங்கள் சந்தித்ததன் தொடர்ச்சியாக ஆளுநர் ரவி டெல்லி சென்றிருக்கலாம். எங்களுக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. இவ்வாறு டிஆர் பாலு கூறினார்.