2024க்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும்: மு.க.ஸ்டாலின்

காலை உணவு திட்டம் 15.9.2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை 2023-24-ம் நிதியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காலைச் சிற்றுண்டி சாப்பிடும் குழந்தைகள் முகத்தில், கட்டணமில்லாப் பேருந்து பயணம் செய்யும் மகளிரின் முகத்தில்-நித்தமும் காலையில் உதயசூரியன் உதிக்கிறது அல்லவா இதுதான் இந்த ஆட்சியினுடைய மாபெரும் சாதனையாகும். கடந்த பத்து ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச விவசாய மின் இணைப்புகள் 2.20 லட்சம் மட்டுமே. ஆனால், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு 15 மாத காலத்தில் வழங்கிய இணைப்புகள் 1 லட்சத்து 50 ஆயிரம். பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை, கல்லூரியில் படிக்கும் இளைஞர்களை மட்டுமல்ல; படிக்க வராமல் இடையில் நின்று விடக்கூடியவர்களையும் பள்ளி, கல்லூரிகளுக்குள் அழைத்து வருகிறோம்.

சில வாரங்களுக்கு முன்னால் கோவையைச் சேர்ந்த தீபாராணி என்ற ஒரு பெண், ‘முதலமைச்சரின் முகவரி’ திட்டத்தில் உள்ள சிஎம் ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணில் பேசி இருக்கிறார். பெரும்பாலும் தங்களது தேவைகளை, கோரிக்கைகளை, புகார்களை பதிவு செய்வதற்காகத்தான் அதிலே பலரும் பேசுவார்கள். ‘உங்களுடைய புகார் என்னம்மா?’ என்று கேட்டதும், ‘புகார் சொல்வதற்காக நான் போன் செய்யவில்லை, சி.எம். போன் நம்பர் என்னிடம் இல்லை, சி.எம்.-க்கு நன்றி சொல்வதற்காக போன் செய்தேன்’ என்று தீபாராணி என்ற அந்தப் பெண்மணி சொல்லி இருக்கிறார். அவர் சொல்கிறார்- “நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன். அதனால என் பிள்ளைக்கு காலையில சாப்பாடு கொடுக்க முடியாது. என் மகன் ஐந்தாவது படிக்கிறான். காலை உணவுத் திட்டத்தின் மூலமாக அவனுக்கு தினமும் காலை உணவு கிடைத்து விடுகிறது, அது தரமானதாக இருக்கிறது. அதுனால சி.எம்க்கு நன்றி சொல்லணும்” என்று அந்தத் தாய் நெகிழ்ச்சியோடு கூறியதுதான் எனக்குக் கிடைத்த பாராட்டு! இதுபோன்று ஏராளமான எளிய மக்களின் பாராட்டின் காரணமாகத்தான், வாழ்த்துக்களின் காரணமாகத்தான் பெருமை அடைந்து இன்றைக்கு நாங்கள் ஊக்கத்தோடு பணியாற்றுகிறோம்.

‘சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்’- இது தலைவர் கலைஞரின் முழக்கம்! அதோடு, தமிழ் மக்களின் நலன் என்று வந்துவிட்டால், சொல்லாததையும் செய்வோம்; ஏன்? சொல்லாமலும் செய்வோம்-என்பதுதான் எனது முழக்கம். மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி; விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்; சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி; 234 தொகுதியிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்; நகர்ப்புரச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்; இல்லம் தேடிக் கல்வி; மக்களைத் தேடி மருத்துவம்; நான் முதல்வன்; புதுமைப் பெண்; இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48; தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்; சமத்துவபுரங்கள் புனரமைப்பு; உழவர் சந்தைகளுக்குப் புத்துயிர் அளித்தல்; அரசு முன் மாதிரிப்பள்ளிகள்; பத்திரிகையாளர் நலவாரியம்; எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்; இலக்கிய மாமணி விருது; கலைஞர் எழுதுகோல் விருது; பேராசிரியர் அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்; பெருந்தலைவர் காமராசர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம்; முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு; பெரியார்-சமூகநீதி நாள் உறுதிமொழி; அம்பேத்கர்-சமத்துவ நாள் உறுதிமொழி; வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்; கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்; அன்னைத் தமிழில் அர்ச்சனை; அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்; மாவட்டம் தோறும் புத்தகச் சந்தைகள்; கோவில் நிலங்கள் மீட்பு; 20 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்; புதிய ஐடிஐ நிறுவனங்கள்; காவல் ஆணையம்; கல்லூரிக் கனவு; வேலைவாய்ப்பு முகாம்கள்; தமிழ்ப் பரப்புரைக் கழகம்; தமிழ்நாடு பசுமை இயக்கம்; சிறுகுறு புத்தாக்க நிறுவனங்கள்; பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் சிற்பி திட்டம்; போதைப் பொருள் ஒழிப்பு; ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம்; நீட் தேர்வு விலக்குச் சட்டம்; ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம்; வழக்கறிஞர் சேமநல நிதி 10 லட்சமாக உயர்வு; நீதிமன்றங்கள் அமைக்க நிலம் ஒதுக்கீடு என்று ஏராளமான திட்டங்களை, சட்டங்களை கடந்த ஒன்றரை ஆண்டுக் காலத்தில் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம். ஒரு சில திட்டங்களைத்தான் நான் சொல்லி இருக்கிறேன். மொத்த திட்டங்களையும் சொல்வதாக இருந்தால் இன்று முழுவதும் நான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய திட்டங்களின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ்நாடும் உயர்ந்திருப்பதை கண்ணுக்கு முன்னால் காண முடிகிறது.

உறுப்பினர்கள் சில கோரிக்கைகளை வைத்தார்கள். பள்ளி வாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும். வட மாநிலங்களில் இருந்து பணிபுரியும் தொழிலாளர்களில் சிலர் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக 85 வழக்குகள் பதிவாகி உள்ளது. 25 கொலை வழக்குகளில் 24 வழக்கில் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் தங்கி இருக்கும் வட மாநில தொழிலாளர்கள் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் அந்த அந்த மாநிலங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழி பயிற்றுவிப்பதை அரசு கண்காணிக்கும். உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் 233 எம்.எல்.ஏ.க்கள் 1483 பள்ளிகளுக்கான கோரிக்கைகள் கொடுத்திருந்தனர்.

அ.தி.மு.க. ஆட்சியை விட தி.மு.க. ஆட்சியில் அதிக கடன் வாங்குவதாக கூறுவது தவறு. அ.தி.மு.க. ஆட்சியில் (2020-21) நிகர கடன் ரூ.83 ஆயிரத்து 275 கோடி. நாங்கள் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வெறும் ரூ.79,333 கோடியாக கடனை குறைத்துள்ளோம். அதாவது 4 ஆயிரம் கோடி குறைவாக வாங்கி உள்ளோம். தமிழக நலன் பேணி பாதுகாக்கப்படுகிறது. நான் 3 முக்கிய அறிவுப்புகளை வெளியிடுகிறேன். கிராமப்புற சாலைகள் 2 ஆண்டுகளில் மேம்படுத்தப்படும். 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 15.9.2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை 2023-24-ம் நிதியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.