மக்களை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் கையேந்த வைத்துவிட்டது: பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் இலவசத்தை கொடுத்து மக்களை வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளுகிறார்கள் என்று தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.

கோவை வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பொங்கல் வைத்தார். அதைத்தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு 2 கரும்பு, ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ அச்சுவெல்லத்தை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரமேலதா விஜயகாந்த் கூறியதாவது:-

தே.மு.தி.க. பொங்கல் விழா மட்டுமல்ல கிறிஸ்துமஸ், ரம்ஜான் என அனைத்து விழாக்களையும் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடுகிறது. நாங்கள் யாரிடமும் நிதி எதுவும் திரட்டாமல் பொங்கல் தொகுப்பை வழங்கியிருக்கிறோம். தமிழக அரசு ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு கரும்புடன், சர்க்கரை, அரிசியை வழங்கி வருகிறது. இதனை வாங்க மக்கள் கூட்டம் முண்டியடிக்கிறது. மக்களை தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் கையேந்த வைத்துவிட்டனர்.

டாஸ்மாக் கடையை எல்லா இடங்களிலும் திறந்து வைத்துள்ளனர். எதை பற்றியும் கேள்வி கேட்கவிடாமல் போதையிலேயே அலைய விட்டு இருக்கிறார்கள். மக்களை வறுமைகோட்டுக்கு கீழ் கொண்டுவர பார்க்கின்றனர். இத்தகைய நிலையை மக்கள் மாற்றி காண்பிக்க வேண்டும். மக்கள் மாறினால்தான் தமிழகம் மாறும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலைப்பாடும், ஆட்சிக்கு வந்தபோது ஒரு நிலைப்பாடும் என்று செயல்படுகிறார். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. ஆனால் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்குசிறப்பாக இருப்பதாக முதல்வர் கூறுகிறார். பெண் போலீசிடமே அந்த கட்சியினர் அத்துமீறி இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது ஜாமீனில் வெளியே வரமுடியாத அளவுக்கு சிறையில் தள்ள வேண்டும்.

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை. கவர்னர் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி தங்களை முன்னிலைப்படுத்தி அரசியல் நாடகம் நடத்தி உள்ளனர். ஆனால் மக்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. இதை திமுகதான் பெரிசு படுத்துக்கிறது. இது கட்டயாமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நாடகமே அன்று நடைந்துள்ளது. ஆளுநரும் முதல்வரும் தங்கள் அதிகாரத்தை காட்ட தமிழக சட்ட சபையை பயன்படுத்திக்கொண்டது கண்டித்தக்கது. ஒரு நாளைக்கு சட்ட சபை நடக்கவேண்டும் என்றால் அது மக்கள் வரிப்பணத்தில் தான் நடக்கிறது. யாருடைய சொந்த பணத்திலும் நடக்கவில்லை. அதனால், சட்டசபை நடக்கிறது என்றால் அதன் மூலம் நாட்டிற்கு நல்லது செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.