இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்: பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போகி பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற வாக்கிற்கிணங்க, எதிர்மறை எண்ணங்களை நீக்கி, நேர்மறை எண்ணங்களை விதைப்போம். இருளை அகற்றி, அனைவரின் வாழ்க்கையும் ஒளி விட, தீமைகள் விலகி, நன்மைகள் பெருகிட, எனது இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை கூறியதாவது:-

இந்த பாதுகாப்பு என்பதே எதோ ஒரு விதத்தில் எனக்கு நெருடல் மாதிரிதான். நான் வந்தால் தொண்டர்கள் கை கொடுப்பாங்க.. போட்டோ எடுப்பாங்க.. கொஞ்சம் ரிலாக்சா போகனும். திடீர் திடீரென புரோகிராமை மாற்றி ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு போவோம். இந்த மாதிரி பாதுகாப்பு வரும் போது நிறைய கட்டுப்பாடுகளுடன் வருகிறது. அதுவும் இப்போ கொடுக்கப்பட்டு இருக்கும் இந்த பாதுகாப்பு இந்தியாவிலேயே குறைவாக சிலருக்குதான் கொடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த பாதுகாப்பு வருகிறது. பயணம் செய்வதற்கு முன்பாகவே சொல்ல வேண்டும். 48 மணி நேரத்திற்கு முன்னாடி தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு அங்கே போகவேண்டும். இது எல்லாம் கட்டுப்பாடுகளாக நான் பார்க்கிறேன். ஆனால் வேறு வழியில்லை. அரசியலில் இருக்கிறோம். சில விஷயங்களில் ஆக்ரோஷமாக பேசுகிறோம். அதனால் எதிரிகளை சம்பாதிக்கிறோம். எனவே மத்திய அரசின் உளவுத்துறை ஆய்வு செய்து சொல்லும் போது அதை அசால்ட்டாக எடுக்காமல் தீவிரமாக எடுத்துக்கொள்வது என்னுடைய கடமை. இவ்வாறு அவர் கூறினார்.