பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார்.
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ந்தேதி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையானது தமிழகம், கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களின் வழியே கடந்து சென்றுள்ளது. கடந்த 6-ந்தேதி மீண்டும் அரியானாவுக்குள் யாத்திரை நுழைந்தது. இந்த யாத்திரையானது தொடர்ந்து, பஞ்சாப்பில் நடந்து வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சந்தோக் சிங் என்பவர் இன்று காலையில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், திடீரென அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, உடனடியாக அவரை ஆம்புலன்சில் வைத்து லூதியானா நகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் வெளியிட்ட செய்தியில், காங்கிரஸ் பாத யாத்திரையில் பங்கேற்ற எம்.பி. சந்தோக் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார் என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். ஒரு நாள் இடைவெளி விட்டு தொடங்கிய இந்த யாத்திரையில், ராகுல் காந்தியுடன் பில்லார் பகுதியில் உள்ள குஷ்த் ஆசிரமத்தில் இருந்து வெளியே வந்த அவர் திடீரென யாத்திரையில் மயங்கி விழுந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து, பக்வாராவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பாதயாத்திரை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது. ராகுல் காந்தி உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் ராணா குர்ஜீத் சிங் மற்றும் விஜய் இந்தர் சிங்லா ஆகியோரும் சென்றுள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் எம்பி சந்தோக் சிங் சவுத்ரியின் மறைவுக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். “எங்கள் எம்.பி., சந்தோக் சிங் சவுத்ரியின் அகால மரணம் குறித்து அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்” என்று அவர் டுவீட் செய்துள்ளார்.