கொலீஜியத்தில் அரசு பிரதிநிதியை சேர்க்க கோருவதில், நீதித்துறையை மத்திய அரசு அச்சுறுத்துவதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு கொலீஜியங்களில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளையும் சேர்த்துக்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மையை உருவாக்க இதை செய்யுமாறு அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-
துணை ஜனாதிபதி தாக்குதல் நடத்துகிறார். சட்ட மந்திரி தாக்குதல் நடத்துகிறார். நீதித்துறையை அச்சுறுத்தவும், பிறகு அதை கைப்பற்றவும் நீதித்துறையுடன் திட்டமிட்டு மோதி வருகிறார்கள். கொலீஜியத்தில் சீர்திருத்தம் செய்வது அவசியம். ஆனால் மத்திய அரசு விரும்புவது, தனக்கு முற்றிலும் கீழ்ப்படியக்கூடிய அமைப்பை. இது, நீதித்துறைக்கு விஷ மாத்திரை கொடுப்பது போன்றது என்று அவர் கூறியுள்ளார். இதுபோல், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும், கிரண் ரிஜிஜுவின் கோரிக்கை மிகவும் ஆபத்தானது என்று கூறியிருந்தார்.
அதற்கு பதில் அளித்து கிரண் ரிஜிஜு கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு, கடந்த 2015-ம் ஆண்டு, தேசிய நீதித்துறை நியமன ஆணைய சட்டத்தை ரத்து செய்தபோது பிறப்பித்த உத்தரவுகள் மற்றும் கருத்துகளுக்கு ஏற்ப அந்த கடிதத்தை எழுதினேன். கொலீஜியத்தை சீர்திருத்தம் செய்யுமாறு அந்த அமர்வு கூறியது. அதன் தொடர்ச்சியாக இந்த நடவடிக்கையை எடுக்கிறோம். கோர்ட்டு உத்தரவை மதியுங்கள். சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.