அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டிகளை தொடங்கி வைத்து உள்ளார்.

பொங்கல், மாட்டு பொங்கல் முடிந்த நிலையில் இன்று தமிழ்நாடு முழுக்க காணும் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தன. இதையடுத்து இன்று அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. மிக பிரம்மாண்ட ஏற்பாட்டுடன் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று நடக்கின்றன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்த நிலையில் அதனை உற்சாகமாக வீரர்கள் பிடித்தது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. காலை 7.30 மணிக்கு வாசிவாசல் திறக்கப்பட்ட நிலையில் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த முறை அலங்காநல்லூரில் 1000 காளைகளும், 350 வீரர்களும் ஆட உள்ளனர். முதல் பாதி ஆட்டம் முடிய உள்ள நிலையில் கிட்டத்தட்ட 200 காளைகள் வரை இதுவரை களமிறக்கப்பட்டு உள்ளன. மக்கள் கூட்டம் இந்த போட்டியை காண ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துள்ளனர். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கூட பயணிகள் வந்துள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண ஆர்வமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்துள்ளனர். இந்த போட்டியில் வெல்லும் நபர்களுக்கு கார், பைக், தங்க செயின், தங்க மோதிரம் என்று சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த தங்க மோதிரமும் வழங்கப்படுகிறது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இந்த போட்டியை கேலரியில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தனர். நடிகர் சூரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.