பஞ்சாபில் நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் ராகுல் காந்தியை யாரும் எதிர்பாராத விதமாக திடீரென வேகமாக ஓடி வந்த நபர் ஒருவர், ராகுல் காந்தியை கட்டிப்பிடித்ததோடு அவரை இழுத்து கீழே தள்ளவும் முயன்றார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் 100 நாட்களை கடந்து தற்போது பஞ்சாபில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்த 10-ம் தேதி அரசு நடைப்பயணம் பஞ்சாபை சென்றடைந்திருக்கிறது. இதனிடையே, இந்த நடைப்பயணத்தில் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு கொடுப்பதில் டெல்லி போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் அலட்சியம் காட்டுவதாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு காங்கிரஸ் அண்மையில் கடிதம் எழுதியது. ஆனால், காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டை ஏற்காத டெல்லி போலீஸாரும், அவருக்கு இசட் ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கும் கமாண்டோ படையும் உள்துறை அமைச்சகத்திற்கு தனித்தனியாக கடிதங்கள் எழுதின. அவற்றில், ராகுல் காந்தி அடிக்கடி பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவதாகவும், கடந்த 2020-ம் ஆண்டு முதல் இதுவரை 100 முறை அவர் இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், ராகுல் காந்தியின் நடைப்பயணம் பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூர் பகுதியில் இன்று காலை நடந்து கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ராகுல் காந்தியை நோக்கி வேகமாக ஓடி வந்த மர்ம நபர் ஒருவர், அப்படியே ராகுல் காந்தியை கட்டிப்பிடித்தார். இதில் ராகுல் காந்தி சுதாரிப்பதற்குள்ளாக அவரை முன்னும் பின்னும் அசைத்த அந்த நபர், ராகுலை முன்னோக்கி இழுத்துச் சென்றார். அந்த நபரின் செயலால் ராகுல் காந்தியே ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என தெரியாமல் மூர்ச்சையாகி நின்றார். அப்போது அங்கிருந்த பாதுகாப்புப் படையினரும், காங்கிரஸ் தொண்டர்களும் உடனடியாக சுதாரித்துக் கொண்டு அந்த நபரை இழுத்து அப்புறப்படுத்தினர்.
ஏற்கனவே ராகுல் காந்திக்கு பாதுகாப்புப் படையினர் சரியாக பாதுகாப்பு கொடுக்கவில்லை என காங்கிரஸ் புகார் தெரிவித்திருக்கும் சூழலில், இப்படியொரு சம்பவம் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு விமர்சனங்களுக்கும் வித்திட்டுள்ளது. இந்நிலையில், அந்த மர்நபரிடம் பஞ்சாப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, காஷ்மீருக்குள் ஒருசில தினங்களில் பாரத் ஜோடோ யாத்திரை நுழையவுள்ளதால் ராகுலின் பாதுகாப்பை அதிகரிக்க பாதுகாப்புப் படையினர் முடிவு செய்துள்ளனர்.