நான் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு ஒருபோதும் செல்லப்போவது இல்லை: ராகுல்

நான் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு ஒருபோதும் செல்லப்போவது இல்லை. அப்படி போவதாக இருந்தால் அதற்கு முன்பாக எனது தலையை கொய்து விடலாம் என்று ராகுல் காந்தி பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது கூறினார்.

கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் பாத யாத்திரை கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அரியானா, டெல்லி வழியாக தற்போது பஞ்சாப் சென்றுள்ளது. பஞ்சாப்பில் ராகுல் காந்தி ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ளார். தனது யாத்திரைக்கு இடையே செய்தியாளர்களை சந்திப்பது, கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது என பரபரப்பாக இருக்கும் ராகுல் காந்தி நேற்று ஹோசியார்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராகுல் காந்தியிடம் தனது ஒன்றுவிட்ட சகோதரரான வருண் காந்தி ஜோடோ யாத்திரையில் பங்கேற்பாரா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகுல் காந்தி கூறியதாவது:-

வருண் காந்தி பாஜகவில் உள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையில் வருண் பங்கேற்றால் அவருக்கு அது பிரச்சினையாக அமையலாம். எனது சித்தாந்தம் அவருடைய(வருண்) சித்தாந்தத்துடன் பொருந்தாது. நான் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு ஒருபோதும் செல்லப்போவது இல்லை. அப்படி போவதாக இருந்தால் அதற்கு முன்பாக எனது தலையை கொய்து விடலாம். வருண் ஒரு காலத்தில் அந்த சித்தாந்தை ஏற்றுக்கொண்டர். தற்போது அதை தொடர்கிறார். ஆனால் என்னால் அதை செய்ய முடியாது. வருண் ஒரு காலத்தில் அந்த சித்தாந்தத்தை உள்வாங்கினார். இப்போதும் அதை பின் தொடர்கிறார். என்னால் அதை ஏற்க முடியாது. ஆர்.எஸ்.எஸ் சிறப்பாக பணிகளை செய்து வருகிறது என என்னிடம் வருண் காந்தி பல ஆண்டுகளுக்கு முன்பாக சொல்ல முயற்சித்தார். நான் வருண் காந்தியிடம் கூறியது என்னவென்றால், நமது குடும்பம் எதற்காக போராடுகிறது என்பதை நீங்கள் படித்து இருந்தாலோ பார்த்து இருந்தாலோ.. அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்றேன். இவ்வாறு அவர் கூறினார்.