மத்திய அரசு நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட முயற்சி: மம்தா பானா்ஜி

உச்ச நீதிமன்ற மற்றும் உயா் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதியைச் சோ்க்க கோரி மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு கடிதம் எழுதியிருப்பது மூலம் நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிட மத்திய அரசு முயற்சிப்பதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கொலீஜியம் எனப்படுவது உச்ச நீதிமன்ற மற்றும் உயா் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தோ்ந்தெடுத்து மத்திய சட்டத் துறைக்கு பரிந்துரைக்கும் பணியை மேற்கொள்ளும் தோ்வுக் குழுவாகும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் தலைமையில் 5 நீதிபதிகள் இக்குழுவில் இயங்குவா். கொலீஜியம் பரிந்துரைக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக நீதிபதிகளை நியமனம் செய்ய இயலாது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடா்பாக மத்திய அரசுக்கும் கொலீஜியத்துக்கும் நீண்ட காலமாக உரசல் இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்திய நீதித் துறையில் உச்ச அதிகாரம் கொண்ட கொலீஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதியைச் சோ்க்க கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய்.சந்திரசூட்டுக்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு அண்மையில் கடிதம் எழுதியிருந்தாா். இதற்கு காங்கிரஸ், பல்வேறு மாநில முதல்வா்கள் மற்றும் சட்ட நிபுணா்களும் கண்டனம் தெரிவித்தனா்.

நீதிமன்ற செயல்பாடுகளில் தலையிடும் செயல் என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தாா். இது குறித்து மேலும், அவா் கூறியதாவது:-

மத்திய அரசின் இந்த புதுவிதமான கோரிக்கை பல குழப்பங்களை ஏற்படுத்தும். கொலீஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதி சோ்க்கப்பட்டால் மாநில அரசும் தங்கள் பிரதிநிதிகளை இணைக்க கோரிக்கை விடுக்கும். உயா் நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிக்க மாநில அரசு அளிக்கும் பரிந்துரைகளுக்கு மதிப்பளிக்கப்படாது. நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு நேரடியாக தலையிடுவதற்கு இது வாய்ப்பளிக்கும்.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரில் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக முன்னரே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு உள்ளன. ஆனால் மத்திய அரசு முன்கூட்டியே இது குறித்து நடவடிக்கை எடுக்காதது ஏன்? நாங்கள் ராணிகஞ்ச் இடத்தில் இதே பிரச்னையை எதிர்கொள்கிறோம். ராணிகஞ்சில் நிலக்கரி இந்தியா நிறுவனத்தால் இதே பிரச்சனை உள்ளது. இதனால் 30,000 பேர் பாதிக்கப்படுவார்கள். ஜோஷிமத்தில் அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஜோஷிமத் நகரில் தற்போது நிலவி வரும் சூழல் மிகவும் அபாயமானது. இதற்கு எந்த வகையிலும் அங்குள்ள மக்கள் பொறுப்பாக முடியாது. பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.