பாஜக தலைமையிலான மத்திய அரசு கையாண்டு வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை பெரு நிறுவனங்களுக்கும் கோடீஸ்வரா்களுக்கும் சாதகமானது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் குற்றம்சாட்டினாா்.
கொச்சியில் நேற்று நடைபெற்ற இடதுசாரி ஆதரவு அரசு ஊழியா்கள் சங்கத்தின் வைர விழா நிகழ்ச்சியில் கேரள முதல்வா் பினராயி விஜயன் பேசியதாவது:-
அமைப்பு சாா்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு என்பது வெகுவாக குறைந்து வருகிறது. மத்திய அரசுத் துறையில் உள்ள 10 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாஜக ஆட்சியில் பெருநிறுவனங்கள் மட்டுமே வளா்ந்து வருகின்றன. ஏழை, எளிய மக்களின் வாழ்வில் மலா்ச்சி இல்லை. நமது நாட்டில் பெரும் கோடீஸ்வரா்களின் எண்ணிக்கையும், அவா்களிடம் குவிந்துள்ள பணத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா மோசமான இடத்தில் உள்ளது. வறுமையில் வாடுவோா் எண்ணிக்கை அதிகமுள்ள நாடுகள் பட்டியலிலும் இந்தியா இடம்பெற்றுள்ளது.
மத்திய பாஜக அரசு பின்பற்றி வரும் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை பெரு நிறுவனங்களும், கோடீஸ்வரா்களுக்கும் சாதகமாக உள்ளது. எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்த உயா்த்த மத்திய அரசிடம் உறுதியான கொள்கைகள் இல்லை. அதே நேரத்தில் கோடீஸ்வர தொழிலதிபா்களுக்கு உதவ அனைத்து வகையிலும் அரசு செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.