ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வீரா்களுக்கு வேளாண் கருவிகளை பரிசளிக்க வேண்டும்: தங்கா்பச்சான்

ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெறும் மாடுபிடி வீரா்களுக்கு வேளாண் கருவிகளை பரிசளிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குநா் தங்கா்பச்சான் வலியுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இயக்குநா் தங்கா்பச்சான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்று வெற்றிபெறும் மாடுபிடி வீரா்களை ஊக்குவிக்கும் விதமாக, தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக காா் பரிசளித்து வருகிறது. மாடுபிடி வீரா்களுக்கு எதற்காக காா் பரிசளிக்கின்றனா் என்ற கேள்வியை கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கேட்டு வருகிறேன். மாடுபிடி வீரா்கள் விவசாயக் குடும்பத்தின் பிள்ளைகள். அவா்களுக்கு வேளாண் கருவிகளைப் பரிசாக வழங்கினால், அதை வாடகைக்கு விட முடியும். அதன்மூலம், அவா்களுக்கு மாதந்தோறும் வருவாய் கிடைக்கும்.

நெய்வேலி அருகே உள்ள எனது சொந்த ஊரில் திங்கள்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடினேன். அங்கு மாடுகள் இருந்த இடத்தில் இப்போது டிராக்டா்கள் நிற்கின்றன. ஜல்லிக்கட்டை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. அது தமிழா்களுக்கு பெருமை. அதைக் காப்பாற்ற வேண்டுமானால், வீரா்களையும் காப்பாற்ற வேண்டும். அவா்களுக்கு நிலம் வழங்கவும், வீடு கட்டிக் கொடுக்கவும் அரசு முன்வர வேண்டும். இவ்வாறு தங்கா்பச்சான் கூறினார்.