ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க மாநில அளவில் 14 பேர் கொண்ட குழுவை பாஜக அறிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. 46 வயதான இவர், கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருமகன் ஈவெரா மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். இதனைத்தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது, இந்திய தேர்தல் ஆணையமும் இந்த தொகுதியை காலி என்று அறிவித்துள்ளது. தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். பொதுவாக இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்பொழுது நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிப்ரவரி 27ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் எனத் தெரிவித்தார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டத்தில் அமலுக்கு வந்தன. அதேபோல் தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி இருப்பார் என்று மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவை இடைத்தேர்தல் இதுவாகும். ஏற்கெனவே இத்தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இதனிடையே அதிமுக தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் யாருக்கு நிறுத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், மீண்டும் தமாகவுக்கு ஒதுக்கப்படுமா அல்லது அதிமுகவே நேரடியாக களமிறங்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க மாநில அளவில் குழு பாஜக சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் 14 பேர் கொண்ட குழுமை அமைத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அந்தக் குழுவில் ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வேதானந்தம், எம்எல்ஏ சரஸ்வதி, என்பி பழனிசாமி உள்ளிட்ட 14 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த 14 பேர் கொண்ட குழு ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.