‘தமிழ்நாடு’ என்பதை உரத்த குரலில் கூறுங்கள்: அலெய்டா குவேரா

சென்னையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் மாநிலத்தின் பெயரை கேட்ட சேகுவேராவின் மகள் ‘தமிழ்நாடு’ என்பதை உரத்த குரலில் கூறச்சொன்னார். பின்னர், பொது நோக்கத்துக்காக அனைவரும் ஒன்று சேர அறிவுறுத்தினார்.

கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியில் ஈடுபட்டு ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டவர் புரட்சியாளர் சேகுவேரா. இவரது மகள் டாக்டர் அலெய்டா குவேரா, பேத்தி டாக்டர் எஸ்டானிபா குவேரா ஆகியோர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் அவர்கள் சென்னைக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்றார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் வந்தியத்தேவன், தமிழக காங்கிரஸ் துணைத்தலைவர் கோபண்ணா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்டோர் வரவேற்று பேசினர்.

வரவேற்புக்கு நன்றி தெரிவித்து அலெய்டா குவேரா பேசினார். அப்போது அவர், கூட்டத்தினரை பார்த்து உங்களது மாநிலத்தின் பெயர் என்ன என கேள்வி எழுப்பினார். அப்போது, விழாவில் பங்கேற்றவர்கள் தமிழ்நாடு என கோஷமிட்டனர். அப்போது அலெய்டா குவேரா, தமிழ்நாடு என்பதை சத்தமாக கூறும்படி கோரினார். இதைத்தொடர்ந்து கூட்டத்தினர், தமிழ்நாடு என சத்தமாக கூறினர். இதன்பின்பு அவர், ஒரு பொது நோக்கத்துக்காக அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும், அப்போது தான் அதில் வெற்றி காண முடியும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பேசியதாவது:-

நான் சே-வின் மகள் என்பதால் ஏராளமானோர் என் மீது அன்பை பொழிகிறீர்கள். அதற்காக நான் ஒரு விளக்கம் கொடுக்க விரும்புகிறேன். நான் யாருடைய மகள் என்பது எப்போதும் முக்கியமல்ல. நான் யாராக இருக்கிறேன் என்பதே முக்கியம். என் தாயார், நான் குழந்தையாக இருந்த போதே, பூமி பந்தின் நிலத்தின் மீது உறுதியாக காலூன்றி நிற்க வேண்டும் என்று சொல்லி கொடுத்திருக்கிறார். எனவே நான் சே-வின் மகளாக மட்டும் நான் பெருமைப்படவில்லை. நான் என் அம்மாவின் மகள் என்பதற்காகவும் பெருமை கொள்கிறேன். சமூக நீதிக்கு தேவையான செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்று எனது தாய் சிறுவயதிலேயே சொல்லி கொடுத்து வளர்த்திருக்கிறார்.

இந்தியாவிற்கு நான் முதல்முறை வந்தபோது, என் மகள் எஸ்டெபானி சிறு குழந்தையாக இருந்தார். இந்தியாவில் நிறைய யானைகள் இருப்பதை அறிந்துகொண்ட அவள், அதன் புகைப்படங்கள் வேண்டும் என்று கூறினாள். கேரளாவிற்கு நான் வந்த போது, அங்கிருந்த மிகப்பெரிய யானையை காட்டியதோடு, போராளி மகள் என்பதால் தைரியமாக என்னை யானை மீது ஏற்றி அமரவும் வைத்தார்கள். ஒரு 15 நிமிடங்கள் நான் யானை மீது அமர்ந்தது என்னால் மறக்க முடியாது. இந்தியாவில், தமிழ்நாட்டிற்கு வரும் போது தோழர்களின் அன்பும், அந்த நாட்களும் நினைவில் இருக்கிறது.

கடந்த முறை எங்கு சென்றாலும் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர். இம்முறை மாலைக்கு பதில் சால்வைகள் அணிவித்து வரவேற்றுள்ளனர். இந்த சால்வைகளை நான் கியூபாவுக்கு எடுத்து செல்ல போகிறேன். எனக்கு தமிழ்நாட்டில் கிடைத்த பேரன்பை, கியூபா கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளிடம் பகிர்ந்துகொள்வேன். இன்று நாம் அனைவரும் ஒற்றுமைக்காகவும், ஒருமைப்பாட்டுக்காகவும் கூடி இருக்கிறோம். இடதுசாரிகள் உலகம் முழுவதும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டமைக்க வேண்டிய கடமை இருக்கிறது.

நாம் என்ன செய்தாலும் அதில் ஒரு பொதுநோக்கம் தேவைப்படுகிறது. உங்கள் மாநிலம் தமிழ்நாடு என்று உரக்க சொன்னீர்கள். இன்றைக்கு இந்த பிரச்சினையில் தமிழ்நாடு என்ற பெயர்தான், உங்களை இணைக்கிறது. எந்த பொதுநோக்கமாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும். கியூபா இன்று சந்திக்கும் பிரச்சினைகளுக்கு, மக்களின் ஒருமைப்பாடு அதிக தேவையாக இருக்கிறது. கியூபா மீது அமெரிக்கா ஏராளமான தாக்குதல்களை தொடுத்துக் கொண்டு இருக்கிறது. பொருளாதார தடையால் கியூபாவின் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எந்த அளவிற்கு தடை என்றால், மிகச்சிறந்த சுற்றுலா கியூபாவில் இருக்கிறது. இதன் மூலம் எண்ணற்ற விஷயங்களை பரிமாறக் கொள்ள முடியும். ஆனால் அந்த பொருட்களை ஏற்றிச் செல்ல எங்களிடம் விமானம் இல்லை. அதனால் விமான நிறுவனங்களோடு குறுகிய கால ஒப்பந்தம் செய்தால், உடனடியாக அமெரிக்கா தலையிடும். இதுபோன்ற ஏராளமான பிரச்சினைகள் இருக்கின்றன. மருந்து, உணவு உள்ளிட்ட பொருளாதாரத்தின் எல்லா தளங்களிலும் எங்கள் மீது தாக்குதல் நடக்கிறது. நாங்கள் மேம்பட அமெரிக்காவின் பொருளாதார தடை நீக்கப்பட வேண்டும்.

நாங்கள் அமெரிக்காவுடன் சரிசமமான அந்தஸ்தின் அடிப்படையில் வியாபாரம் செய்ய விரும்புகிறோம். எந்த கப்பலும் எங்கள் கடற்கரைக்கு வர மறுக்கிறார்கள். எத்தனை தடைகள் வந்தாலும், கியூபா மக்களின் வாழ்வதற்கான உரிமையை தடுக்க முடியவில்லை. மக்களின் மகிழ்ச்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக சோசியலிஷ சமூக அமைப்பை உருவாக்க விரும்புகிறோம். குடும்ப அம்சங்களிலும் சமத்துவம் இருக்க வேண்டும். பெண்களுக்காக ஏராளமான திட்டங்கள் கியூபாவில் உள்ளது. ஏனென்றால் பெண்கள் உயிரை உற்பத்தி செய்யக் கூடிய அதிகாரம் பெற்றவர்கள். பெண்களால் பெரும் வேகத்தோடும், உணர்வோம் போராட முடியும். இந்தியாவுக்கும் கியூபாவுக்கும் தூரம் அதிகமாக இருக்கலாம். ஆனால் இரு மக்களும் சகோதரர்கள் தான். இன்றைய சூழலில் நமது பலத்தை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை இருக்கிறது.

என் தந்தை பொலிவியாவில் கொலை செய்யப்பட்டார். அதற்காக உலகம் முழுவதும் அழுது புலம்பினார்கள். அதனை வைத்து பாடல்கள் உருவாகின. ஒரு பாடலை குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். அது, இழப்பு என்றாலே துயரம் தான். ஆனால், இழப்புக்குள் நமது பலத்தை அதிகரித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளது. எனவே ஒருவர் இறந்தால், நாம் ஒருவரை இழந்தால், உலகம் வருத்தப்படும் என்பது உண்மை. ஆனால், வருத்தம் கண்ணீரால் இல்லாமல் போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும். நான் இறந்தால் எனக்காக நீங்கள் அழாதீர்கள். அதற்கு பதில், நான் விட்டுச்செல்லும் பணிகளை தொடருங்கள் என்பது தான். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி பேசியதாவது:-

திமுக சார்பாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமையும், பெருமிதமும் கொள்கிறேன். எத்தனையோ ஆண்டுகளாக புத்தகங்களில், சுவரொட்டிகளில் புரட்சி என்ற சொல்லை நினைக்கும் போது, கண் முன் வந்து நிற்கும் முகத்தின் சாயலை மேடையில் பார்க்க கூடிய பெருமையோடு நிற்கிறேன். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் நீங்கள் சந்திக்க விரும்பும் தலைவர் யார் என்று கேட்டபோது, பெரியார், அண்ணா, காமராசர் என்று பட்டியலை சொன்னார். கருணாநிதி சந்திக்க விரும்பியது யார்? அப்போது, மறைந்த தலைவர்கள் இல்லாமல் வாழும் தலைவர்களில் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது, முதலில் வந்த பெயர் ஃபிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் தான். எத்தனை காலங்கள் கடந்தாலும் புரட்சி வெற்றிபெறும். புரட்சிக்கான நம்பிக்கையின் வடிவமாக சின்னமாக இருப்பது கியூபாவும் சே-வும் தான்.

இன்றைய இளைஞர்கள் கூட தங்கள் சட்டையில் சேவின் முகத்தை வைத்து உலகை மாற்றக் கூடிய நம்பிக்கையுடன் வருகிறார்கள் என்றால், அதற்கு கியூபா புரட்சி தான் காரணம். அந்த புரட்சியின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல், ஆதிக்க சக்திகள் தடைகள் விதித்து கொண்டே இருக்கிறது. அலெய்டா குவேரா ஒரு மருத்துவர். கியூபாவில் எல்லோரும் கனவு காணும் அளவிற்கு மக்களுக்கான மருத்துவம் இருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் வீட்டிற்கு வந்து மக்களிடம் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று மருத்துவர்கள் கேட்கிறார்கள். அதனை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் செய்துமுடித்தவர்கள். நமக்கு வழிகாட்டியாக இருக்க கூடியவர்கள். மருத்துவர்கள் மக்களோடு வாழக் கூடிய சூழலை உருவாக்கியவர்கள்.

நீட்டை கொண்டு வராமல் இருந்திருந்தால், எதை சாதிக்க வேண்டும், சாதித்து முடித்திருக்க முடியும் என்று நினைத்தோமோ, அதனை கியூபா செய்து காட்டி இருக்கிறது. அப்படியான மருந்துகள் அனைத்தும் இலவசம். வெளிநாடுகளில் இருந்து மருந்தினை கொண்டு வர முடியாத அளவிற்கு, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு உலகம் கியூபா மீதான தடையை தளர்த்தாமல் வைத்திருக்கிறது. உதவ வேண்டும் என்ற நினைக்கும் நாடுகளை கூட தடுத்து நிறுத்தகின்றன ஆதிக்கம் படைத்த சக்திகள். மனிதநேயமே நம் மொழி ஆதிக்கத்தை நிலை நிறுத்துவது மட்டும் தான் முக்கியம் என்று நினைக்கக் கூடிய நிலையை அலெய்டா ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார். நாம் அனைவருக்கும் இருக்கும் ஒரே மொழி மனித நேயம். ஆனால் மற்றவர்களுக்கு மனிதநேயம் கடந்து மதம், மதம் என்றால் வெறி, திமிர். ஆனால் நாம் பேசுவது மனிதநேயம்.

கியூபாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கியூபா மக்களோடு நாம் நிற்கிறோம் என்று உரக்க சொல்ல வேண்டும் என்பதற்காக கூட்டத்தை நடத்துகிறோம். அவர்கள் எப்படி இந்த உலகத்திற்கு புரட்சியின் நம்பிக்கையாக இருக்கிறார்களோ, அவர்களுக்கான நம்பிக்கையாக நாம் நிற்போம் என்று கூறி கொள்கிறேன். சே சொல்வது போல், புரட்சி என்பது பழத்தை போல் அல்ல. தானாக பழுத்து கீழே விழும் என்று காத்திருக்க முடியாது. அதுபோல் கி.வீரமணி பேசும் போது, தமிழ்நாடு என்று சொல்லும் போதெல்லாம் ஆரவாரம் இருந்தது. அதற்கு பின் ஒரு கதை இருந்தது. இன்று அந்த கதை இல்லாமல் போய்விட்டது. அந்த கிணத்தையே காணவில்லை என்று சொல்லிட்டாங்க. நாங்கள் சொன்னது புரியவில்லை என்று கூறிவிட்டார்கள். நமக்கு அவர்கள் பேசும் மொழி புரியாமல் தான் இருக்கிறது. நான் சொல்லாத ஒன்றை சொல்லிவிட்டீர்கள் என்று இங்கு உருவாகிய புரட்சி கனல் அவர்களை விளக்கம் அளிக்க வைத்திருக்கிறது. சாதாரணமாக மக்களை உரசி பார்த்தால், தமிழர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால் தீண்டி பார்த்தால், உள்ளே தெரியக் கூடிய தீக்கங்கு அணையவில்லை என்று தெரியும் போது, யாராக இருந்தாலும் நாங்கள் சொல்லவில்லை என்று சொல்லும் நிலையை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த மேடையில் அவரை சந்திக்கும் வாய்ப்பும் என் வாழ்நாளில் மறக்க முடியாத சந்திப்பாக இருக்கும். அதேபோல் என் தலைவர் கருணாநிதியின் ஆதர்சமாக இருக்கக் கூடிய ஒரு புரட்சியாளனின் மகளை இந்த மேடையில் அவருக்கு இருந்த அதே உறுதியோடு நாங்கள் கியூபா மக்களுடன் இருப்போம். அந்த உறுதியை அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.