பிரதமர் மோடி குறித்து பிபிசி எடுத்த ஆவணப்படத்திற்கு இந்தியா கடும் கண்டனம்!

குஜராத் கலவரம், பிரதமர் மோடி தொடர்பாக பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியிட்டு உள்ளது. பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பல தகவல்கள் இருந்தன. பிரிட்டன் அரசின் ரகசிய விசாரணையில் கலவரத்துக்கு மோடியே காரணம் என தெரியவந்ததாக ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் கலவரம், பிரதமர் மோடி தொடர்பாக பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒருதலைப்பட்சமாக உள்நோக்கத்துடன் பிபிசி ஆவணப்படம் தயாரிப்பு என குற்றம் சாடிய அவர், மேலும் இந்த ஆவணப்படம் அதை உருவாக்கிய ஏஜென்சியின் எண்ண ஓட்டமாகும். இது ஒரு பிரச்சாரப் பகுதி, அதில் பாரபட்சம் மற்றும் காலனித்துவ மனப்பான்மை உள்ளது. அத்தகைய திரைப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று கூறினார்.

2002 குஜராத் கலவரம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையும், அப்போது அம்மாநில முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், முஸ்லிம்கள் நிலை குறித்தும் ஆவணப்படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படத்தை மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலர் தங்களது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்தனர். இதனால், அவர்களை பின்தொடர்பவர்களும் பொதுமக்கள் பலரும் அந்த விடியோவைப் பார்வையிட்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். இதற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் கருத்துகள் எழுந்து வந்த நிலையில், தற்போது பிபிசியின் ஆவணப்படம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

யூடியூபிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு இந்த விடியோவை அனைவரும் விரைந்து பார்க்க வேண்டும் என மூத்த வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண், டெரிக் ஓ பிரையன் ஆகியோர் குறிப்பிட்டு பகிர்ந்திருந்தனர்.

2002 குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”இந்தியா: மோடி மீதான கேள்வி” (பகுதி -1) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படத்தில் 2002ஆம் ஆண்டு பிப்ரவரி – மார்ச் மாதத்தில் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் 790 முஸ்லிம்கள், 254 ஹிந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 223 பேர் காணவில்லை என்றும் 2,500 பேர் படுகாயமடைந்ததாகவும் 2005ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில், லண்டன் வெளியுறவுத் துறை முன்னாள் செயலர் ஜேக் ஸ்ட்ரா (2001 – 2006), பேசிய கருத்துக்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் கலவர புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகளைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பேசியுள்ள ஒருவர், கலவரத்துக்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடிதான் காரணம் என சுட்டிக்காட்டுகிறார்.

குஜராத் கலவரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அளித்த அறிக்கையும் ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையில், கலவரத்தின்போது முஸ்லிம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், இந்துக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து முஸ்லிம்களை அப்புறப்படுத்துவதற்காக அவர்களின் உடமைகளை சேதப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் கலவரம் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் ஆவணப்படத்துக்கு நேர்காணல் அளித்த இந்திய அரசியல் ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். கலவரம் தொடர்பாக நரேந்திர மோடி ஊடகத்துக்கு அளித்த நேர்காணல்களையும், அந்த காலகட்டத்தில் மக்களிடம் அவர் (நரேந்திர மோடி) மேற்கொண்ட பிரசாரங்களையும் தொகுத்து ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.