பாலியல் புகார் குறித்து இந்திய மல்யுத்த சம்மேளனம் பதிலளிக்க 72 மணிநேரம் கெடு!

வீராங்கனைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவா் மீது எழுந்துள்ள புகாருக்கு 72 மணிநேரத்தில் பதிலளிக்க மத்திய விளையாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேள தலைவராக பாஜகவைச் சோ்ந்த எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறாா். இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட வீராங்கனைகளை பாலியல் ரீதியில் பிரிஜ் பூஷன் சரண் சிங் துன்புறுத்தியதாக நட்சத்திர வீராங்கனையும், போகட் சகோதரிகளில் ஒருவருமான வினேஷ் போகட் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். மேலும், ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற பஜ்ரங் புனியா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்திய மல்யுத்த சம்மேள நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் – மந்தரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய அவர்கள், மல்யுத்தத்த விளையாட்டிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத பலர் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். அப்படி உள்ளவர்கள் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டு, பிரதமர், உள்துறை அமைச்சர்கள் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் முக்கிய வீரர், வீராங்கனை வைத்த குற்றச்சாட்டை விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுகுறித்து மல்யுத்த கூட்டமைப்பு 72 மணி நேரத்திற்கு விளக்கம் தர வேண்டும், அப்படி இல்லையெனில் தேசிய விளையாட்டு மேம்பாட்டுக் குறியீடு, 2011-ன் விதிபடி, கூட்டமைப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுதுறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல், லக்னெளவில் நடைபெறவிருந்த தேசிய மகளிர் மல்யுத்த வீராங்கனைகள் பயிற்சி முகாமை ரத்து செய்வதாகவும் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவருக்கு எதிரான பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. விசாரணைக் குழுவில் 2 பெண் பிரிதிநிதிகள் இருக்க வாய்ப்பு என ஒன்றிய அரசு வட்டாரங்கள் தகவல் அளித்துள்ளது. வீரர்கள் அளித்த புகார் குறித்து மல்யுத்த கூட்டமைப்பிடம் விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தன் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் அடியோடு மறுப்பதாகவும், இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் தயார் என்றும் பிரிஜ் பூஷன் சரண் தெரிவித்துள்ளார்.