விரைவில் தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் தொடங்க உள்ளேன்: அண்ணாமலை

விரைவில் தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் தொடங்க உள்ளேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று விட்டு விமானத்தில் சென்னை திரும்பிய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவித்ததும் தேர்தல் பணிக்குழுவை அமைத்தோம். இது குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடமும், ஜி.கே.வாசனிடமும் தொலைபேசி மூலம் பேசினேன். அவர்கள் கூறிய கருத்தை பா.ஜ.க. மூத்த தலைவர்களுக்கும், தேசிய தலைமைக்கும் தெரியப்படுத்தி உள்ளேன். எங்கள் நிலைப்பாடு குறித்து 3 நாளில் முறைப்படி அறிவிப்பு வெளியாகும்.

எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கியதற்கு மத்திய அரசு காரணம் சொல்லவில்லை. தமிழ்நாட்டுக்கு வெளியில் இருந்தும் அச்சுறுத்தல் இருக்கலாம். பாதுகாப்பு சார்ந்த விசயங்களில் மத்திய உளவுத் துறை கூறுவதை கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும். கட்சியில் கொடுக்கப்பட்டு உள்ள பணி, கட்சியில் வளர்ச்சிப் பணியை செய்வது தான். விரைவில் தமிழ்நாடு முழுவதும் நடை பயணம் தொடங்க உள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடுவேனா? என்று கேட்கின்றீர்கள். முதலில் பா.ஜ.க. போட்டியிடுமா? என்று பார்க்க வேண்டும். பிறகுமான் யார் போட்டியிடுவது? என்ற கேள்வி வரும். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி கட்சியின் மூத்த தலைவர்களிடம் கருத்தை தெரிவிப்பேன். கூட்டணி தர்மம், நியாயம் என்று இருக்கின்றது. குறுகிய கால செயல்பாட்டுக்காக அதை மாற்றிக் கொள்ளக் கூடாது. 2021-ம் ஆண்டு யார் போட்டியிட்டார்கள்? என்பதை பார்க்க வேண்டும். சிலவற்றை அனுசரித்து செல்ல வேண்டும்.

தமிழகத்துக்கு திரும்ப ஜல்லிக்கட்டை கொண்டு வந்த கட்சி பா.ஜ.க. கொண்டு வந்தவர் பிரதமர் நரேந்திர மோடி. மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு எப்போதும் தடை விதிக்காது. தமிழகம், தமிழ்நாடு என்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அரசியல் செய்வதற்கு வேறு விசயம் இல்லாததால் சில கட்சியினர் கவர்னர் கூறியதை வைத்து அரசியல் செய்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கவர்னர் தனது கருத்தை வெளியிட்டார்.

தேஜஸ்வி சூர்யா விமானத்தில் அவசர கால கதவை திறந்தது குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளிவருகின்றன. டிசம்பர் மாதம் 10-ந் தேதி சிறிய ரக விமானத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றேன். தேஜஸ்வி சூர்யாவின் இருக்கை அருகே எனது இருக்கை இருந்தது. 1 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் புறப்பட்டது. விமானத்தில் அவசர கதவு திறந்திருப்பது போல் இருப்பதாக நாங்கள் கூறியதை தொடர்ந்து விமானியிடம் தெரிவிக்கப்பட்டது. பொறியாளர்கள் குழு அவசரகால கதவை கழற்றி மீண்டும் மாட்டினர். நடந்த அனைத்தையும் தேஜஸ்வி சூர்யாவிடம் விமான நிறுவனம் சார்பில் எழுத்து பூர்வமாக எழுதிக் வாங்கி கொண்டனர். தெரியாமல் தேஜஸ்வி சூர்யா கை அதில் பட்டிருந்தது. எனவே பயணிகளிடம் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தெரியாமல் நடந்த தவறு அது. எதிர்கட்சியினர் இதை ஊதி பெரிது படுத்துகின்றனர். விமானத்தின் கதவை நான் திறந்ததாக ஒரு தி.மு.க. அமைச்சர் தவறான தகவலை பேசியிருக்கின்றார்.

வரலாறு காணாத வகையில் 2022-ம் ஆண்டு தமிழ்நாட்டில் கொலை, குற்றங்கள் அதிகரித்துள்ளது. அது குறித்து ஆதாரப்பூர்வமான தரவுகளை நான் விரைவில் வெளியிடுவேன். தமிழகம் கலவர பூமியாக மாற காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ள முதல்-அமைச்சர் விளக்கம் கூற வேண்டும். காவல்துறையினரிடம் அமைச்சர்கள் பேசுவதை முதல்-அமைச்சர் தடுக்க வேண்டும். தி.மு.க. தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் அறிவுரை சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.