ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டி: ஓபிஎஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட உள்ளோம் என ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அளிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 4ஆம் தேதி மரணமடைந்தார். இதையொட்டி இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக கூட்டணியில் ஏற்கனவே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர் தரப்பில் அதிமுகவே களமிறங்க முடிவு செய்துள்ளது. தமாகா தலைவர் ஜிகே வாசன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடும் என நேற்று அறிவித்தார். எடப்பாடி பழனிசாமி அணியின் மூத்த நிர்வாகிகள் இன்று பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேசுகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தல் பற்றி தீவிரமாக ஆலோசித்து வந்த ஓ.பன்னீர்செல்வம், தாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட இருப்பதாக சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அறிவித்துள்ளார். ஈபிஎஸ் அணி இடைத்தேர்தலில் களமிறங்கும் நிலையில், ஓபிஎஸ் அணியும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:-

இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னத்தை பெற எங்களுக்கு முழு உரிமை உள்ளது. 2026 வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன். சட்டவிரோதமாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம். ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு என்றைக்கும் பன்னீர்செல்வம் காரணமாக இருக்க மாட்டான். பிரிந்து கிடக்கும் அணிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கூட்டணி கட்சிகள் எங்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றன. பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம். பாஜக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் ஆதரவளிப்போம். ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார். ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக இதுவரை ஈபிஎஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.