ஜம்முவில் இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்த நிலையில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தொடர்ந்து நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
கன்னியாகுமரியிலிருந்து கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி, ராகுல் காந்தி நடை பயணத்தை துவங்கினார். இதையடுத்து, கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா, தற்போது ஜம்மு – காஷ்மீரில் நுழைந்துள்ளது. அங்கு லகான்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜம்மு – காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, ராகுல் காந்தியை வரவேற்றார்.
இந்தநிலையில் ஜம்முவில் இன்று நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்புகள், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது. பாத யாத்திரையை முன்னிட்டு யூனியன் பிரதேசம் பலத்த பாதுகாப்பு போர்வையில் இருந்த நேரத்தில். ஜம்முவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு காரணமாக, ஜம்முவில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள சத்வால் என்ற இடத்தில் காந்தியின் யாத்திரை தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்புகளின் தன்மை இன்னும் கண்டறியப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இரட்டை குண்டுவெடிப்புகளில் 6 பேர் காயமடைந்ததாக கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஜம்மு) முகேஷ் சிங் உறுதிப்படுத்தினார். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி அறிவித்தார்.
இதனிடையே ஜம்மு-காஷ்மீரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் தொடர்ந்து நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்தது. தற்போது அந்த கேள்விக்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
ஒற்றுமை நடைப்பயணம் எதுவாக இருந்தாலும் தொடரும். நடைப்பயணம் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, அதுதொடர்பாக துணைநிலை ஆளுநரை நான் சந்தித்தேன். ஜம்மு-காஷ்மீரில் உள்ள எங்கள் தலைவர்கள் அனைவரும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது அவர்களின் பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.