உச்ச நீதிமன்றத்தை விட பிபிசி உயர்வானது என்ற எண்ணம் நம் நாட்டு மக்கள் சிலருக்கு இருக்கிறது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு இருவேறு மதத்தினருக்கு இடையே மிகப்பெரிய கலவரம் மூண்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தக் கலவரத்திற்கு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, அமைச்சராக இருந்த அமித் ஷா உள்ளிட்டோருக்கு பெரும் பங்கு இருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் குற்றவாளிகள் அல்ல என தீர்ப்பு வெளியானது.
இந்நிலையில், பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனம் அண்மையில் இரண்டு ஆவணப்படங்களை வெளியிட்டது. குஜராத் கலவரம் தொடர்பான அந்த இரண்டு ஆவணப் படங்களிலும், அன்றைக்கு ஏற்பட்ட கலவரங்களுககும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே தொடர்பு இருப்பதை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி குற்றமற்றவர் என கூறிய நிலையில், பிபிசியின் இந்த ஆவணப் படங்களுக்கு பாஜகவும், வலதுசாரி அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகம் உட்பட அனைத்து சமூகத்தினரும் நேர்மறையான எண்ணத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், சிலரோ நமது நாட்டின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுகின்றனர். அவர்களின் முதலாளிகளை மகிழ்ச்சிப்படுத்த இதுபோன்ற காரியங்களில் அவர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால், இவர்களை போன்றவர்கள் உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளிலும் இருந்தும் செய்யும் செயல்களால் இந்தியா களங்கப்பட்டு விடாது. உச்ச நீதிமன்றத்தை பிபிசி உயர்வானது என நம் நாட்டில் சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இன்னமும் காலனி ஆதிக்கத்தின் மீது மோகம் உள்ளது. அவர்களுக்கு இந்தியாவை பலவீனப்படுத்த வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் இருக்கிறது. ஆனால் அவர்களின் எண்ணம் ஈடேறாது. இவ்வாறு கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.