வாரிசு படத்தின் வசூல் ரூ. 250 கோடி!

வாரிசு படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் 11வது நாள் வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ரூ. 250 கோடி வசூலாகியுள்ளது.

நடிகர் விஜய் பல ஆண்டுகளுக்கு பிறுகு பேமிலி செண்டிமென்ட் கதையில் நடித்துள்ளார். குடும்ப உறவுகளுக்கு இடையே நடக்கும் மனக்கசப்பு குறித்தும், சிக்கல்கள் குறித்தும் வாரிசு படத்தில் அழகாக காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் அப்பாவாக சரத்குமாரும், அம்மாவாக ஜெயசுதாவும் நடித்துள்ளனர். ஷியாம் அண்ணனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இப்படத்தை தில் ராஜு தயாரித்திருக்கிறார்.வாரிசு படத்தின் பாடல்கள் ஹிட்டடித்த அளவுக்கு ரசிகர்கள் படத்தை கொண்டாடவில்லை. யோகி பாபு உடனான காமெடிக்கும், சில செண்டிமென்ட் காட்சியும் சிறப்பாக இருந்ததாக ரசிகர்கள் கூறினார்கள். ஆனால், ஒரு சில ரசிகர்கள் இந்தி சீரியல் போல இருப்பதாக கிண்டலடித்து வருகின்றனர்.

இப்படம் விமர்சன ரீதியில் வரவேற்பு இல்லை என்றாலும், வசூலில் ஓரளவு நல்ல வருவாயை ஈட்டி வருவதாக தெரிகிறது. வாரிசு படத்தின் 7வது நாளில் ரூ.210 கோடி வசூலித்துள்ளதாக தமிழக விநியோகஸ்தர் லலித் தெரிவித்து இருந்தார். தற்போது, பொங்கல் விடுமுறை மற்றும் வார நாட்களும் முடிவடைந்துள்ளதால், வாரிசு படத்தின் 11 நாட்கள் நிறைவடைந்த நிலையில், உலகம் முழுக்க ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்.

முன்னதாக வாரிசு திரைப்படத்தின் வெற்றியை நடிகர் விஜய், படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த சக்சஸ் பார்ட்டியில், நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், நடிகர் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.