தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த குணசித்திர நடிகரும் இயக்குநருமான ஈ. ராமதாஸ் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவு செய்தி தமிழ் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் தான் ராமதாஸ். சிறந்த திரைக்கதை எழுத்தாளராக விளங்கிய இவர் வசூல் ராஜா எம்பிபிஎஸ், காக்கிச் சட்டை, விசாரணை உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். போலீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ராமதாஸ் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். விழுப்புரத்தை பூர்வீகமாக கொண்ட ராமதாஸ் சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என சென்னைக்கு வந்தவர். நேற்று இரவு மாரடைப்பு காரணமாக ராமதாஸ் உயிரிழந்ததாக அவரது மகன் கலைச்செல்வன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ராமதாஸின் மறைவு செய்தி அறிந்த சினிமா பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் ராமதாஸ் கல்லூரி படிக்கும் போதே சினிமாவில் ஆர்வம் ஏற்பட்ட நிலையில், சென்னை மயிலாப்பூருக்கு வந்து குடியமர்ந்த ராமதாஸ் இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலாவிடம் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றினார். அதன் பின்னர் இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனிடம் 6 படங்களுக்கும் மேல் உதவி இயக்குநராக பணியாற்றிய ராமதாஸ் 1986ம் ஆண்டு நடிகர் மோகனை வைத்து ஆயிரம் பூக்கள் மலரட்டும் படத்தை இயக்கி இயக்குநராக மாறினார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, இராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் என பல படங்களை இயக்கியுள்ளார். அதேபோல் திரைக்கதை ஆசிரியராக பல படங்களில் வேலை பார்த்துள்ளார் ராமதாஸ். ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அவரது மகன் தனது பேஸ்புக் பக்கத்தில், ” எனது தந்தை திரு. E ராமதாஸ் அவர்கள் இன்று(நேற்று) இரவு MGM மருத்துவமனையில் மாரடைப்பால் இறைவனடி சேர்ந்தார். இறுதி சடங்குகள் 24/01/2023 காலை 11 மணி -மாலை 5 மணியளவில் 16/1078, முனுசாமி சாலை, கே. கே. நகர், அவரது இல்லத்தில் நடைபெற இருக்கிறது என்று வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். – கலைச்செல்வன்” என பதிவிட்டுள்ளார்.