புத்திசாலியான ஒரு அன்பான நபரைத் தான் நான் எதிர்பார்க்கிறேன்: ராகுல்

காஷ்மீரில் இப்போது பாத யாத்திரை சென்று கொண்டிருக்கும் காங்கிரஸின் ராகுல் காந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில், திருமணம் குறித்த கேள்விக்கு புத்திசாலியான ஒரு அன்பான நபரைத் தான் நான் எதிர்பார்க்கிறேன் என்று பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி இப்போது நாடு முழுக்க பாத யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை இப்போது நிறைவடையும் தருவாயில் காஷ்மீரில் உள்ளது. இந்த பாத யாத்திரையில் ராகுல் காந்தியுடன் இணைந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்களும் கலந்து கொண்டு வருகிறார்கள். இப்போது ராகுல் காந்தி காஷ்மீரில் பாத யாத்திரை சென்று வரும் நிலையில், அவர் ராஜஸ்தானில் இருக்கும் போது பிரபல யூடியூப் சேனலான கர்லி டேல்ஸ் என்ற சேனலுக்கு ராகுல் காந்தி நேர்காணல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அது இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசியல் தாண்டி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாகத் திருமணம், உணவுப் பழக்கம். உடற்பயிற்சி உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசியுள்ளார். 52 வயதான ராகுல் காந்தி திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறியதாவது:-

நான் திருமணத்திற்கு எதிரானவன் இல்லை.. பிரச்சனை என்னவென்றால் எனது பெற்றோருக்கு மிக அழகான ஒரு திருமணம் அமைந்தது. அவர்கள் ஒருவரையொருவர் முழுமையாகக் காதலித்தனர்.. இதனால் என் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. சரியான பெண்ணை பார்க்கும் போது நிச்சயம் திருமணம் செய்வேன். புத்திசாலியான ஒரு அன்பான நபரைத் தான் நான் எதிர்பார்க்கிறேன். இது எப்போது நடக்கும் எனத் தெரியாது.

நான் உணவு விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்த மாட்டேன்.. இதுதான் வேண்டும் என்று இல்லை. எது கிடைக்குமோ அதைச் சாப்பிடுவேன். இருப்பினும், எனக்குப் பட்டாணியும் பலாப்பழமும் பிடிக்காது.. வீட்டில் இருக்கும் போது டயர்ட்டில் இருப்பேன். ஆனால், இப்போது பாத யாத்திரையில் அதே டயர்ட்டை பின்பற்ற முடியாது. எனவே, பாத யாத்திரையில் கிடைக்கும் உணவைத் தான் சாப்பிடுகிறேன். அனைத்து மாநிலங்களிலும் அங்கே கிடைக்கும் உணவைச் சாப்பிட்டேன். தெலங்கானா உணவு கொஞ்சம் காரமாக இருந்தது. நான் அந்தளவுக்குக் காரம் சாப்பிட மாட்டேன். வீட்டில் எப்போதும் மதியம் சப்பாத்தி உள்ளிட்ட உணவைச் சமைப்பார்கள். இரவு கான்டினென்டல் வகை உணவைச் சமைப்பார்கள். டயர்ட் காரணமாக இனிப்பு வகை உணவுகளைத் தவிர்ப்பேன். நான்வெஜ் உணவு அனைத்தும் பிடிக்கும். குறிப்பாக சிக்கன் டிக்கா, சீக் கபாப் மற்றும் நல்ல ஆம்லெட் உள்ளிட்டவை பிடிக்கும். ஒரு கப் காபியுடன் அன்றைய தினத்தைத் தொடங்குவதே பிடிக்கும். பழைய டெல்லி பகுதியில் இருக்கும் ஹோட்டல்களுக்கு செல்வேன். அங்கு முகலாய் ஹோட்டல்களுக்கு செல்வேன். மேலும் சரவண பவன் உள்ளிட்ட தென்னிந்திய உணவகங்களுக்கும் அதிகம் செல்வேன்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அலகாபாத்திற்கு குடிபெயர்ந்த காஷ்மீரி பண்டிட் குடும்பம் எங்களுடையது. அதேநேரம் எனது தாத்தா (தந்தைவழி தாத்தா பெரோஸ் காந்தியை) ஒரு பார்சி ஆவர். எனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நான் பள்ளி செல்லக் கூடாது என்றார்கள். இது உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நாள் திடீரென நாங்கள் பள்ளிக்குச் செல்ல முடியாது என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறினார்கள். பாட்டி இறப்பிற்கு முன்பு வரை நாங்கள் வெளியே செல்வோம். ஆனால், பாட்டி இறப்பிற்குப் பின் நிலைமை மாறியது. அதன் பிறகு நான் வீட்டில் இருந்தே எனது பள்ளிக் கல்வியைப் படிக்க வேண்டி இருந்தது. வெளியே எங்கும் செல்ல முடியவில்லை.. செயின்ட் ஸ்டீபன்ஸ், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்லூரி படிப்பை முடித்தேன். மேற்படிப்பை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தேன். அதன் பிறகு லண்டனில் ஒரு நிறுவனத்தில் எனது முதல் வேலை இருந்தது. அப்போது எனக்குச் சம்பளமாக 2,500-3,000 பவுண்டுகள் கிடைத்தது என்று கூறினார்.

பிரதமர் பிரதமரானால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “நான் பிரதமரானால், 3 விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். முதலில் நாட்டின் கல்வி அமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவேன். அடுத்துச் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் தருவேன். அடுத்து விவசாயிகள், வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் திட்டங்களைக் கொண்டு வருவேன். என்னுடன் சேர்ந்த இந்த பாத யாத்திரையில் நமது நாட்டிற்காக பல்வேறு தரப்பினரும் இணைந்து நடந்துள்ளனர்” என்றார்.

அவரது பிட்னஸ் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “எனக்கு ஸ்கூபா டைவிங், சைக்கிள் ஓட்டுதல் பிடிக்கும். நான் கல்லூரியில் பாக்ஸிங் செய்வேன். எனது வாழ்க்கையில் நான் தொடர்ச்சியாக எப்போதும் உடற்பயிற்சிகளைச் செய்து வருகிறேன். தற்காப்புக் கலைகள் முக்கியமானவை. அவை வன்முறையைப் பரப்ப உருவாக்கப்பட்டது இல்லை. ஆனால், இங்குத் தவறாக அதை கற்றுக் கொடுக்கிறார்கள். யாத்திரையிலும் கூட தினமும் தற்காப்புக் கலை பயிற்சியைச் செய்வேன்” என்று அவர் தெரிவித்தார்.