பிபிசி ஆவணப்படத்தை ஜே.என்.யூ.,வில் திரையிடும் முயற்சிக்கு எதிர்ப்பு!

மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட பிபிசி தயாரித்த பிரதமர் மோடியை விமர்சிக்கும் ஆவணப்படத்தை டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு திரையிட திட்டமிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த பிபிசி செய்தி நிறுவனம் ‘இந்தியா மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில், இரண்டு பாகங்களாக ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், 2002ல் குஜராத்தில் நடந்த கலவரத்துடன், அப்போது அங்கு முதல்வராக இருந்த மோடியை தொடர்புபடுத்தியுள்ளனர். இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ‘இந்த ஆவணப்படம், இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்யும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக’ வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்தது. இந்த நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை செயலர் அபூர்வ சந்திரா, பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்தை பார்ப்பதற்காக சமூக வலைதளங்களில் பகிரப்படும் இணைப்புகளை முடக்க உத்தரவிட்டார். தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அவசர சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) உள்ள மாணவர்கள் அமைப்பு, மத்திய அரசால் முடக்கப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை திரையிட திட்டமிட்டு, அதனை பார்வையிட மாணவர்களுக்கு அழைப்பும் விடுத்துள்ளது. இன்று (ஜன.,24) இரவு 9 மணிக்கு இந்த ஆவணப்படத்தை திரையிட உள்ளதாக ஜே.என்.யு மாணவர் அமைப்பு அறிவித்தது. ஆனால், ஆவணப்பட ஒளிபரப்பை ரத்து செய்யுமாறு பல்கலை நிர்வாகம் மாணவர் அமைப்பிடம் வலியுறுத்தியுள்ளது. பல்கலை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இது போன்ற அங்கீகரிக்கப்படாத செயல்பாடு பல்கலைக்கழக வளாகத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் அல்லது தனிநபர்கள் முன்மொழியப்பட்ட இத்திட்டத்தை ரத்து செய்யுமாறு உறுதியாக அறிவுறுத்தப்படுகிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.