இரட்டை இலை சின்னத்தை முடக்க எந்தக்காலத்திலும் விடமாட்டேன். என் உயிர் உள்ளவரை சின்னத்தை முடக்க முடியாது என்று வி.கே.சசிகலா கூறினார்.
மன்னார்குடி அடுத்த சுந்தரக்கோட்டையில் இன்று நடைபெற்ற தனது சகோதர் வி.திவாகரன் நடத்தும் கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவில் கலந்துகொண்ட பின் சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சசிகலா கூறியதாவது:-
ஒருவர் பதவிக்கு வருவதற்கு காரணம் அந்தக் கட்சியின் அடிமட்டத் தொண்டன்தான். அவர்கள் எப்போதும் நம்மை ஏற்றிவிடும் ஏணியின் கடைசிப்படியாக தான் எப்போதும் இருப்பார்கள். அவர்களால் தான் நாம் மேடையில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என எம்ஜிஆர் பல இடங்களில் சொல்லி வந்துள்ளார். அது மாதிரியான சூழ்நிலை இன்று அதிமுகவில் இல்லை. இதற்கு ஒரு நல்ல முடிவினை கீழ் படிந்து நிற்கும் தொண்டர்கள் நிச்சயமாக எடுப்பார்கள்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதை அவரவர் நடவடிக்கையை சார்ந்ததுதான். சின்னத்தை முடக்கும் செயலில் யார் ஈடுப்பட்டாலும் அது எம்ஜிஆர், ஜெயலலிதா, அதிமுக தொண்டர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாக இருக்கும். ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்காக சிறுகட்சிகளின் அலுவலகங்களுக்கு அதிமுக தலைவர்கள் போய் ஆதரவு கேட்பது ஒன்னறை கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியான அதிமுகவை பற்றி அவர்கள் அவ்வளவுதான் புரிந்துகொண்டுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.
இரட்டை இலை சின்னத்தை முடக்க எந்தக்காலத்திலும் விடமாட்டேன். என் உயிர் உள்ளவரை சின்னத்தை முடக்க முடியாது. கட்சியில் பிரிந்து உள்ள தலைவர்கள் யார் எப்படி என எடை போட்டு வருகிறேன். நீதிமன்றம், தேர்தல் ஆணையம் முடிவை எதிர்பார்த்துள்ளேன். கட்சியின் கொள்கைகள், கூட்டணி உடன்பாடு ஆகியவற்றை அதிமுகவில் இருவர் கலந்து பேசி முடிவு எடுக்கமுடியாது. அது திமுகவில் வேண்டும் என்றால் இருக்கலாம். அதிமுகவில் உள்ள தற்போதைய குழப்பத்திற்கு விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.
அதிமுகவை ஒன்றிணைக்க அனைத்து வகையிலும் முயற்சி எடுத்து வருகிறேன். இனிவரும் காலங்களில் அவற்றை வெளிப்படையாக செய்வேன். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி அணி வேட்பாளர்களை நிறுத்தினால் இதில் யாரை ஆதரிக்க வேண்டும் என கட்சி தொண்டர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு என் ஆதரவு என்ற முடிவில் உள்ளேன். என் தனிப்பட்ட முடிவு என்பது ஏதும் இல்லை.
அதிமுகவை பாஜக உள்ளிட்ட எந்த கட்சியின் கட்டுப்பாட்டிலும் இல்லை. வரும் மக்களவைத் தேர்தலுக்குள் ஒன்றிணையும். அதிமுகவை பிரிக்கும் சூழ்ச்சிகாரர்கள் என் நிழலை கூட நெருக்க முடியாது. இபிஎஸ், ஓபிஎஸ் இருவரின் செயல்பாடுகளை பார்க்கும் போது அது திமுகவிற்கு சாதகமாகவே உள்ளது. இனியாவது இவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறுவதை தவிர்த்துவிட்டு ஒன்றிணைந்து தமிழக அரசியில் தீயசக்தியான திமுக வீழ்த்த வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அதுமட்டும் அல்ல தொண்டர்களின் எதிர்ப்பார்ப்பும் அதுதான்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிவாய்ப்பு யாருக்கு இருக்கும் என கூறமுடியாது. அது மக்களின் கையில்தான் உள்ளது. தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய முடியுமோ அதைதான் வாக்குறுதியாக அளித்தார். திமுகவினர் மேடை தோறும் பெரிய பெட்டியை வைத்து கோரிக்கை மனு வாங்கினர். அதனை மக்கள் முன்பே பூட்டுபோட்டு பூட்டினர். தேர்தல் வெற்றிக்கு பின் பெட்டி திறக்கப்பட்டு மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என வெற்று வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகிவிட்டது, எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை பெட்டியில் போட்டப்பட்ட பூட்டின் சாவி தொலைந்துவிட்டதா? என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.